கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி.. சேகர் பாபு மீது கோபமா? உதயநிதி ஓபன் டாக்!

Published On:

| By Mathi

Udhayanithi Opens Up on MK Stalin's Kolathur Defeat

”முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தோல்வி அடைந்ததை திமுகவினர் மறக்கக் கூடாது; அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

திமுகவின் சென்னை கிழக்கு மாவட்டம் நடத்திய “போராளி ஓய்வதில்லை” – கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நேற்று (ஆகஸ்ட் 24) உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: எந்த நிலையிலும் மக்களோடு மக்களாக நிற்கக்கூடிய இயக்கமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது. அதனைத்தான் கலைஞர், தலைவர் ஸ்டாலின் கற்றுக்கொடுத்து வளர்த்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சியினர் எவ்வாறு ஆட்சிக்கு வந்தனர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தேர்தலில் ‘திராவிடம் 2.1’ மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எதிரி யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் களமிறங்கியதால் பின்னடைவைச் சந்தித்தோம். அந்தத் தவறை இனி எப்போதுமே நாம் செய்ய மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ADVERTISEMENT

சென்னை கிழக்கு மாவட்டத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு நான் கலந்துகொள்கிறேன். சேகர் பாபுவின் மீது எனக்குக் கோபம் இருப்பதாக அவர் கருதக்கூடும்; அது கோபம் அல்ல, வருத்தம்; அவர் மீதும் இந்த மாவட்டத்தின் மீதும் எனக்குள்ள உரிமையாகும்.

தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரிடம் முழுமையாகச் சென்று சேராதது போன்ற பல காரணங்களைக் கூறலாம். இருப்பினும், கொளத்தூர் தொகுதி தோல்வியை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தோல்வியை நாம் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியாக மாற்றிட வேண்டும். கிழக்கு மாவட்டத் தொண்டர்கள் அதைச் செய்து காட்டுவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்குண்டு.

ADVERTISEMENT

தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் அமைச்சர்களாகவும் பதவியேற்றாலும், தாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை தேர்தலுக்கு முன்பு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. மிகப்பெரிய விபத்து போலத்தான் இந்தத் தேர்தல் முடிந்துள்ளது. மேலும், மக்கள் அவர்களுக்கு முழுமையான பெரும்பான்மையை வழங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அவர்கள் வென்றது வெறும் 108 இடங்கள் மட்டுமே. கழகத் தலைவர் மற்றும் உடன்பிறப்புகளின் உழைப்பால் வெற்றி பெற்றவர்களின் தயவில்தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் தைரியமாகச் சொல்லலாம்.

வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆட்சிக்கு வந்தவுடன் அன்றாடம் ஆளுநரைச் சந்திப்பது, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது என அவர்கள் செயல்பட்டனர். ஊழலை ஒழிப்போம், மாற்றம் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது முந்தைய ஆட்சியின் திட்டப் பெயர்களை மாற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் ‘மாற்றம்’ என்ற பெயரில் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே இந்த அரசு அளித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் காலத்தில் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த என்னை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதுமட்டுமின்றி, நம் இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வரும் இளம் தலைமுறையினர் (Gen-Z) மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவையில் எங்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதிலளிப்பதில்லை. மாறாக, மடைமாற்று நடவடிக்கைகளையே (Diversion Tactics) கையாண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக்கத் திராணியில்லாமல் ஆளுங்கட்சியினர் திசைதிருப்பும் செயல்களில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் சில கோப்புகள் தன் மேஜையில் தயாராக இருப்பதாக முதலமைச்சர் மிரட்டல் விடுத்து வருகிறார். தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளையும் உடனடியாகத் திறந்து மக்கள் முன்பு வெளியிடட்டும்; அத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது.

ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களின் பெயர்கள்கூட பொதுமக்களுக்குத் தெரியாத நிலையே நீடிக்கிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசுப் பணத்தில் கார்கள் வாங்கித் தரப்போவதாகக் கூறுகின்றனர். கஜானாவில் பணமில்லை என்று கூறிவிட்டு, தற்போது கார் வாங்குவதற்கு எங்கு பணம் வந்தது? விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்றவர்கள், இத்தகைய ஆடம்பரச் செலவுகளுக்கு மட்டும் நிதியை எங்குிருந்து பெறுகிறார்கள்?

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் முதன்முதலில் குரல் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக மற்றும் நமது தலைவர் ஸ்டாலின்தான். தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதாளத்திற்கு அழைத்துச் சென்றுள்ள இந்த தவெக அரசுக்கு உரிய நேரத்தில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும், இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share