vIDEO : உதயநிதி கைது.. தஞ்சையில் திமுக, தவெக போராட்டத்தால் பதற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நகரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதலமைச்சர் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், BNS சட்டப்பிரிவுகள் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினரால் அழைத்து வரப்படுகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பேருந்துகளை மறித்தும், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, திமுகவினருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பங்கள் பிடுங்கி எறியப்பட்டதாகவும், செருப்புகள் வீசப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT

அதேநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசிய பனகல் கட்டிடம் முன்பு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தஞ்சாவூர் நகரின் முக்கிய பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், நீதிமன்ற வளாகம், பனகல் கட்டிடம் மற்றும் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சை அழைத்து செல்லப்படும் நிலையில் அங்கு திமுக மற்றும் தவெக வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share