திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சனாதன ஒழிப்பு பேச்சு
உதயநிதி ஸ்டாலின் 2023-ம் ஆண்டு சென்னையில் பேசிய சனாதன ஒழிப்பு பேச்சு, இந்தியா முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ”சனாதன ஒழிப்பு” மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும்.
சனாதனம் அப்படிங்கிற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் – சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்.. ராஜ்பவனில் இருந்து அடிக்கடி சனாதனம், சனாதனம் என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
இதனையடுத்து சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவர்களை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி உச்சநீதிமன்றம் போனார் உதயநிதி ஸ்டாலின். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு, “உதயநிதி ஸ்டாலின் மீது இனி புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
எடப்பாடி வழக்கில் உதயநிதிக்கு தடை
இந்த சனாதன தர்ம பேச்சு சர்ச்சையின் போது உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையும் சர்ச்சையானது. உதயநிதி ஸ்டாலின் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், “சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது; ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என கூறியிருந்தார்.
உதயநிதியின் இந்த அறிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில், “என்னை பற்றி உதயநிதி அவதூறு பரப்புகிறார்; இதனால் என்னைப் பற்றி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்; ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு உதயநிதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளது. இதை அனுமதித்தால் மனுதாரருக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும். எனவே, இனி இதுபோல அறிக்கைகள் வெளியிடக் கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது” என உத்தரவிட்டார். அதாவது எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேச தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முதல்வர் விஜய் குறித்து..
தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, ”ஜூன் மாசத்துல 9.9 டி.எம்.சி தண்ணீர்… ஜூலை மாசத்துல 33 டி.எம்.சி தண்ணீர்… அப்படின்னு மொத்தம் 42 டி.எம்.சி தண்ணீர் நமக்கு வந்திருக்கணும். இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல. ஆனா இதைப்பத்தி முதலமைச்சர் வாய் திறந்து பேசுறாரா? பேசுறது கிடையாது. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே எண்ணம்… திமுக-மேல என்ன பொய் வழக்கு போடலாம்? என்ன பொய் கேஸ் போடலாம்? (கூட்டத்தில் சிலர் ‘திரிஷா… திரிஷா…’ என்று கத்த) எங்க தண்ணி வருதோ இல்லையோ… அங்க தண்ணி வரணும்… நான் காவிரியை சொன்னேன்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெகவினர் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி தஞ்சாவூருக்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
