“கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகம்”: உதயநிதி கைது – பிரேமலதா கண்டனம்!

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார். 

இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,  ”ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்;

கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும்.

ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும்.

எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share