எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்துசெயப்பட்டு தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெகவினர் அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று அவரை கைது செய்ய தஞ்சை போலீசார், நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர். சென்னை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
உதயநிதி கைது செய்யப்படுவதை தொடர்ந்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், திமுக வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் வருகைத் தந்தனர்.
உதயநிதியை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், அதுவரை உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நீதிபதி இளந்திரையன் அறிவுறுத்தினார்.
ஆனால் உதயநிதி வீட்டில், அவரை கைது செய்வதற்காக போலீசார் திமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
”நாங்கள் காலை 7 மணிக்கே வந்துவிட்டோம்… கொஞ்சம் ஒத்துழைங்க சார் ” என்று போலீசார் கேட்க அங்கிருந்த திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ”நீங்கள் 12 மணிக்கு கூட வாங்க… இவர் எம்.எல்.ஏவாக இருக்கிறார். சட்டம் என ஒன்று இருக்கிறது இல்லையா?” என்று கூறினார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து போலீசார், நீதிமன்றத்தில் இருந்து இந்த நிமிடம் வரை எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை… என்று சொல்ல என்.ஆர்.இளங்கோ, ”பப்ளிக் ப்ரொசிக்யூட்டரிடம் பேசினீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், ”நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கப்போறது கிடையாது. பப்ளிக் ப்ரொசிக்யூட்டரிடம் கோர்ட்டில் என்ன நடந்தது என்று கேளுங்கள்” என்று கூறினார்.
இதற்கு போலீசார் மீண்டும் இந்த நிமிடம் வரை எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று தெரிவித்தனர்.
இப்படி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே, அங்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வந்துவிட்டார். உடனே உதயநிதி, ”என்ன மாமா… நீங்கள் ஏன் வந்தீங்க?” என்று கூறி அவர் அருகில் எழுந்து அமர்ந்தார்.
பின்னர் உதயநிதியிடம் துரைமுருகன் இந்த விவகாரம் தொடர்பாக தோளில் தட்டிக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிடையாகவும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நிகழ்வுகள் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.
இந்தசூழலில் 12 மணிக்குள்ளாகவே உதயநிதியை கைது செய்து, போலீசார் தஞ்சை அழைத்து செல்கின்றனர்.
