உதயநிதியை இன்றே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Mathi

Interim Bail Granted to Udhayanidhi

முதல்வர் விஜய்யை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

திமுக இளைஞரணித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் போலீசார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி முன்பாக உதயநிதி தரப்பில் முன்ஜாமீன் கோரி முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனை ஏற்று நீதிபதி இளந்திரையன் இந்த மனுவை விசாரித்து, பகல் 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

ஆனாலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தங்களுக்கு வரவில்லை என கூறி உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார் தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பாக உதயநிதியின் முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது அரசு தரப்பில், “விசாரணைக்காக உதயநிதி தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார்; காவல் நிலைய விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார். உதயநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை. காவல் நிலைய ஜாமீனில் விடுவிப்போம்“ என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை, காவல் நிலைய ஜாமீனில் இன்றே விடுவிக்க நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share