உதயநிதியை கண்டித்து பழனியில் தவெக ஆர்ப்பாட்டம் – புகைப்படத்தை செருப்பால் அடித்ததால் பரபரப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

பழனியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்பட பேனரைச் செருப்பால் அடித்துத் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முன்பு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளைக் கைவிட வேண்டும் என்றும், தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய்யை ஏளனப்படுத்திப் பேசக் கூடாது என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் பாலன், நகரச் செயலாளர் மிதுன் மனோகரன், பெண்கள் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தின் போது வைக்கப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பெண்கள் அணி நிர்வாகிகள் செருப்பால் அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்துப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்த பேனரை அப்புறப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பழனியில் உதயநிதி ஸ்டாலின் பேனர் மீது செருப்பால் அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share