தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க போராடி வருகிறார். ஆளுநர் அர்லேகர், விஜய்யிடம் மெஜாரிட்டிக்கான 118 எம்.எல்.ஏக்கள் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
தற்போதைய நிலையில் விஜய் ஆட்சி அமைக்க 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் கம்யூனிஸ் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிகவின் ஆதரவை கேட்டு விஜய் கடிதம் அனுப்பினார். பின்னர் இந்த கட்சிகளின் தலைவர்களிடம் போனிலும் விஜய் பேசினார். மேலும் தவெக இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான மு.வீரபாண்டியன், பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.
அதேபோல விஜய்க்கு, ஸ்டாலின் சொன்னால்தான் ஆதரவு என அறிவித்த முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனையும் நிர்மல்குமார் சந்தித்து பேசினார்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் வீரபாண்டியன், பெ.சண்முகம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தர இருக்கிற சூழ்நிலையை ஸ்டாலின் விவரித்தார்.
ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க திமுகவைப் போல வெளியில் இருந்து ஆதரவு தருவது என்பது மிகப் பெரிய வரலாற்று பிழையாகிவிடும் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர்.
அதேநேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து ஜெயித்துவிட்டு விஜய் ஆட்சி அமைக்க எப்படி ஆதரவு தர முடியும்? அதுவும் சரியான முடிவாக இருக்காது என்பதும் கம்யூனிஸ்ட்களின் கருத்து.
இந்த நிலையில் சிபிஎம், சிபிஐ கட்சிகளின் மாநில குழுக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தற்போது சிபிஎம்-ன் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில்,
- தவெக ஆட்சி அமைத்தாலும்
- அதிமுக ஆட்சி அமைத்தாலும்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிடலாம் என்கிற கருத்தை அதிகமான உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றனர் என்கின்றன தகவல்கள்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மாநில குழு கூட்டம் கூடி இறுதி முடிவு எடுக்க இருக்கிறது.
