உதயநிதி மீது குவியும் புகார்கள்: சென்னை வீட்டில் போலீஸ் குவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகவும், பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தவெக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசுகையில் தமிழக முதல்வர் விஜய் குறித்துச் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு தவெக உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“நாவடக்கம் தேவை” – அமைச்சர் ஆனந்த் கண்டனம்

ADVERTISEMENT

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “எஎதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.

ADVERTISEMENT

Decent Approach – Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.

அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.

அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.

மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

இந்நிலையில், தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியது தொடர்பாக தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வகுமார், தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், உதயநிதியின் பேச்சு அடங்கிய காணொளியை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சையில் புகார்

மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் புகார் மனு அளித்துள்ளார்.

போலீஸ் குவிப்பு

இதனிடையே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தவும், காவல்நிலையங்களில் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share