பூட்டான் டைரீஸ் 19 – நிவேதிதா லூயிஸ்
விமான டிக்கெட் எடுத்தாயிற்று; விசா கையில் இருக்கிறது; வண்டி முன்பதிவு செய்தாகிவிட்டது; பயண அட்டவணையும் தயார். அடுத்து என்ன?
எங்கு தங்குவது என்பதுதான் பெரிய பிரச்சினை. பெண்கள், அதிலும் துணையின்றி தனியே செல்பவர்கள் என்பதால் நாம் ‘காம்ப்ரமைஸ்’ செய்துகொள்ளவே முடியாத விஷயம் நம் பாதுகாப்பு. நல்ல ஹோட்டல்கள் பாதுகாப்பானவை என்றாலும், அவற்றைவிட ஹோம் ஸ்டேக்கள் (வீடுகளின் அறைகளில் ஒன்றிரு நாள்கள் பேயிங் கெஸ்ட்போல தங்குவது) மிகுந்த பாதுகாப்பானவை. சரியான ஆப் மூலம் அவற்றைப் பதிவு செய்துகொள்வது நல்லது.
**தங்கும் இடம், காலநிலை…**
ஹோம் ஸ்டேக்கள் பெரும்பாலும் பெண்களால் நிர்வகிக்கப்படுபவை. வீடுகளில் உள்ள பெண்கள் கூடுதல் வருவாய்க்காகவே பெரும்பாலும் இந்த ஹோம் ஸ்டேக்களை நடத்துகிறார்கள். தரமான வீட்டு உணவு கிடைப்பதால் வயிறு, வாய், கைக்கு எந்த பாதகமும் இல்லை. வீடுகளில் தங்குவது அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தை அவர்கள் வீட்டில் தோழி போல அமர்ந்து பார்த்து, ரசித்து, உணர ஏதுவாகிறது. ஏர் பிஎன்பி, ஓயோ போன்றவற்றில் ரிவ்யூக்கள் பார்த்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பணம் செலுத்துவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடம் வீடு நகரிலிருந்து எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பதைக் கேட்டு, கூகுள் மேப்பில் சரி பார்த்துக்கொள்ளுங்கள். நகரிலிருந்து வெகுதூரம் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் வீடுகள் உடல்நலப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினை வந்தால் சமாளிக்கச் சிரமமானவை. வீடுகள் ஹோட்டல்களை விட குறைந்த செலவில் கிடைப்பதால், குறைந்தது 10 – 20% பணம் மிச்சம் செய்யலாம். உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தேவை எதுவும் இருந்தால் முன்கூட்டியே உரிமையாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்.
செல்லும் இடங்களில் நீங்கள் போகும் நேரம் காலநிலை எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாக முன்னரே பார்த்துவிடுங்கள். அக்யுவெதர் போன்றவை செல்லும் பகுதிகளின் தட்பவெப்பத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே ஓரளவுக்குக் கணிக்கக்கூடியவை. குளிர்ப் பிரதேசங்கள் என்றால் குளியலறையில் ஹீட்டர் இருக்கிறதா, ரூம் ஹீட்டர் இருக்கிறதா என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வெயில் இருக்கும் என்றால், அறைகளில் ஏசி இருக்கிறதா, ஏசி கார்தான் புக் செய்கிறோமா என்று பாருங்கள். இன்டர்நெட் வசதி அறையில் இருக்கிறதா அல்லது ஹாலில் மட்டுமா என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அலைபேசி சிக்னல் இருக்குமா என்றும் கேட்டுவிடுங்கள். பெரும்பாலான ஹோம் ஸ்டேக்களில் காலை உணவு காம்ப்ளிமென்டரி என்பதால், அதையும் முன்பதிவுக்கு முன் உறுதி செய்துவிடுங்கள்.

**தகவல் தொடர்பு, உடை, உடல் நலம்…**
இந்திய சிம் கார்டுகளை அங்கு பயன்படுத்த முடியுமா, அப்படி என்றால் எந்த நிறுவன சிம், இன்டர்நேஷனல் ரோமிங் வசதி நம் எண்ணுக்கு இருக்கிறதா, அப்படி இல்லையென்றால் அந்த நாட்டில் எந்த நிறுவன சிம் பரவலாகக் கிடைக்கிறது, எந்த மொபைல் நிறுவன சிக்னல் அங்கு நன்றாக இருக்கிறது என்று விசாரியுங்கள். தகவல் தொடர்பு இல்லையென்றால் பெண்கள் தனியே சமாளிப்பது இயலாதது. சிம் வாங்க என்னென்ன தேவைப்படும், எங்கு கிடைக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் இருவரிடம் சிம் இருந்தால்கூடப் போதும்; இன்டர்நெட் பயன்படுத்த டெதரிங் செய்துகொள்ளலாம்.
ஏதேனும் தேசிய விழாக்கள், நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கச் செல்கிறீர்கள் என்றால் அதன் தேதி, அதற்கான முன்பதிவு போன்றவற்றை சரிபார்த்து செய்துகொள்ளுங்கள். எங்கு செல்ல பெர்மிட் தேவைப்படும் என்பதை கவனித்து, அதற்கேற்றாற்போலத் திட்டமிடுங்கள். பயணத்தில் கொண்டுசெல்ல வேண்டிய ஆடைகள், பிற பொருட்களின் செக் லிஸ்ட் ஒன்றை அவ்வப்போது கூகுள் நோட்ஸில் அப்டேட் செய்துவாருங்கள். ‘குறைந்த லக்கேஜ்; நிறைந்த நிம்மதி’ என்பதை மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள். ஜீன்ஸ், பலாசோ, லெக்கிங் போன்றவை மாற்றி அணிய வசதியானவை. மூன்று ஜீன்ஸ், ஆறு குர்தாக்கள் அல்லது டி-ஷர்ட்டுகள் இருந்தால் போதும், நிம்மதியாக ஒரு வாரம் மாற்றி மாற்றி ஆடையணிந்து பயணிக்கலாம்.
சில நாடுகளில் கோயில்கள், பௌத்த விகாரங்களில் ஜீன்ஸ் அணிந்து செல்ல அனுமதி இல்லை. முன்னரே அது பற்றி வாசித்தால், கணுக்கால் வரை மறைக்கும் பாவாடைகள் கொண்டுசெல்லலாம். உள்ளாடைகள், இரவு அணியும் நைட்டிகள் போதுமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள். குளிர்ப் பிரதேசங்களில் துவைத்துக் காயவைப்பது பெரிய தலைவலி! அணிவதற்கு வசதியான ஒரு ஷூ போதுமானது.
குளிர்ப் பிரதேசம் என்றால் ஸ்வெட்டர், ஜெர்கின், ஷால், சாக்ஸ், கையுறைகள், குல்லா போன்றவை மிக மிக அவசியம். கையடக்கக் குடை கண்டிப்பாக இருக்கட்டும். அதிக எடை இல்லாத இவற்றைக் கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். ஒரு வார டூருக்கு ஒரு சிறு பெட்டியும், ஒரு ஹேண்ட் லக்கேஜும் தாராளமானது. குளிர்கால க்ரீம், சன்ஸ்க்ரீன், லிப் பாம் மறக்க வேண்டாம்.
சிறு பையில் யாராவது ஒருவர் தலைவலி, காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, செரிமான மாத்திரைகள், இருமல் மருந்து ஆகியவற்றைக் கொண்டுசெல்லுவது நல்லது. சானிட்டரி நேப்கின்கள் அல்லது மென்ஸ்ட்ரூவல் குப்பிகளை மறக்க வேண்டாம். கையடக்கமான டார்ச், கத்தரிக்கோல், ஊசி, நூல்கண்டு, கத்தி போன்றவற்றை செக் இன் செய்யும் லக்கேஜில் மறக்காமல் வைத்துக்கொள்ளவும்.
அழுக்குத் துணிகளைத் தனியே வைக்க மடக்கக்கூடிய ஹோல்ட்-ஆல் அல்லது பை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அழுக்குத் துணிகளை நிச்சயம் நீங்கள் கொண்டு செல்லும் பெட்டி, ஹேண்ட் பேக்கில், பயண முடிவில் வைக்கவே முடியாது!
காமிரா, அதன் சார்ஜர், மொபைல் சார்ஜர், மடிக்கணினி, அதன் சார்ஜர் போன்றவற்றை ஹேண்ட் பேக்கேஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

**உணவும் பணமும்**
இவை எல்லாவற்றையும் விட முக்கியம், வெந்நீர் ஊற்றி எளிதில் அடுப்பின்றிச் செய்யக்கூடிய கப் நூடுல்ஸ். எப்போது எங்கு தேவைப்படும் என்று தெரியாத ஆனால், கட்டாயம் பயணங்களில் கொண்டு செல்ல வேண்டிய உணவுப் பொருள் இந்த கப் நூடுல்ஸ்.
நீங்கள் செல்லவிருக்கும் நாட்டின் மக்கள் என்ன மாதிரியான உணவுப் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று பயணத் திட்டமிடலின்போதே தெரிந்துகொள்ளுங்கள். அந்த நாட்டின் ஸ்பெஷல் உணவுகளை ஒரு பிடி பிடிக்காமல் திரும்பவே கூடாது. உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவையும் இதன் மூலம் தவிர்த்துவிடலாம்.
பெட்டியைக் கண்டிப்பாகப் பூட்டியே வையுங்கள். தங்கும் அறைகளுக்கு என்னதான் வீடுகளில் பூட்டு இருந்தாலும், நீங்களும் கையோடு சிறிய பூட்டு ஒன்றைக் கொண்டுசென்று, வெளியே செல்கையில் இந்தக் கூடுதல் பூட்டைப் போட்டு அறையைப் பூட்டிச் செல்லுங்கள்.
செல்வதற்கு முன் நேரில் சந்தித்து பணப்பட்டுவாடா, இறுதிக் கட்டத் திட்டமிடல் செய்யும்போதே ஒவ்வொரு நாளும் என்னென்ன பார்க்கப் போகிறீர்கள் என்ற தெளிவான திட்டமிடலைச் செய்துவிடுங்கள். கூகுள் மேப்பின் உதவியுடன் எந்தெந்த இடம் எங்கு இருக்கிறது, எதை முதலில் பார்ப்பது, எதை மாலையில் பார்ப்பது, செல்லும் பாதையில் என்னென்ன இடங்கள் இருக்கின்றன என்று பாயின்ட் ஏ முதல் கணக்கிட்டுத் தெளிவான நேரத்துடன் அட்டவணையைத் தயாரித்து கூகுள் நோட்ஸில் ஏற்றிவிடுங்கள்.
இந்தச் சந்திப்பில் விமான டிக்கெட், விசா பேப்பர்கள், பாஸ்போர்ட் நகல், ஐடி கார்டு நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் போன்றவற்றை ஒரு ஃபைல் போட்டு யாராவது ஒருவர் கையில் பத்திரமாக சரிபார்த்துக் கொடுத்துவிடுங்கள். உங்களது ஐடி கார்டுகள், பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய பேப்பர்களை ஸ்கேன் செய்து மொபைலில் சேமித்துக்கொள்ளுங்கள்.
**இறுதிக் கட்ட ஏற்பாடுகள்**
விமான டிக்கெட், தங்குமிடம் போக, தினசரி உணவு செலவு, சுற்றிப் பார்க்கும் இடங்களில் எடுக்கும் டிக்கெட் செலவு, வீடு திரும்புகையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாங்கும் பரிசுப் பொருட்களுக்கான செலவு ஆகியவற்றுக்கு எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிடுங்கள். அதை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று பேசி முடிவெடுங்கள். போட்ட பட்ஜெட்டை விட 30% கட்டாயம் கூடுதல் பணம் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். ரூபாய் நோட்டு மாற்றி ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் எவ்வளவு தேவையோ அதைப் பிரித்து பெட்டியில் கொஞ்சம், கைப்பையில் கொஞ்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
**கவனத்தில் கொள்க:**
· ஹோம் ஸ்டேக்களில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்துகொள்ளுதல்
· லோக்கல் விழாக்களுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு, வனவிலங்கு காப்பகங்கள் போன்றவற்றுக்கு ஆன்லைன் பதிவு
· பெர்மிட் தேவைப்படும் இடங்களுக்கு வலை வழி முன்பதிவு
· அதுவரையிலான செலவுக் கணக்கை நேரில் சந்தித்துச் சரிபார்த்துப் பிரித்துக்கொள்ளுதல், செக்லிஸ்ட் தயார் செய்து அவ்வப்போது அப்டேட் செய்தல்
· பார்க்கவிருக்கும் இடங்களைப் பொறுத்து தினசரி அட்டவணை தயாரித்தல்
· கூடுதல் செலவுக்கு அந்நியச் செலாவணி வாங்கி வைத்தல்
· சிம் கார்டு பயன்பாடு பற்றிய தெளிவு
ஒவ்வொரு பயணமும் நமக்கு எதையோ கற்றுத் தருகிறது. எல்லாப் பயணங்களும் எதையோ நோக்கி இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல; ஆனால், ஒவ்வொரு பயணமும் நமக்குள் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பெண்களாகத் தனியே பயணிப்பதில் விடுதலை உணர்வு ஏற்படுவது உண்மைதான். ஆண்டுக்கு ஒருமுறையாவது இது போல ஒரு சிறு பயணம் சென்று தனியாக நம்மை நாமே ரசித்துக்கொண்டு, கைகால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டு வந்தால், ஆண்டு முழுமைக்குமான உற்சாகத்தை அது தரும். தனியே பெண்களாகச் செல்லும் பயணங்கள் நமக்குள் தன்னம்பிக்கையை, தனிமையில் அமைதியை ரசிக்கும் பரிபூரணத்தை விதைக்கின்றன.
நிறைய பயணப்படுவோம்; ரசித்து வாழ்வோம்!
(முற்றும்)
[பகுதி 1](https://minnambalam.com/k/2019/04/30/10)
[பகுதி 2](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 3](https://minnambalam.com/k/2019/05/07/10)
[பகுதி 4](https://minnambalam.com/k/2019/05/13/72)
[பகுதி 5](https://minnambalam.com/k/2019/05/17/18)
[பகுதி 6](https://minnambalam.com/k/2019/05/21/28)
[பகுதி 7](https://minnambalam.com/k/2019/05/24/48)
[பகுதி 8](https://minnambalam.com/k/2019/05/28/17)
[பகுதி 9](https://minnambalam.com/k/2019/05/31/14)
[பகுதி 10](https://minnambalam.com/k/2019/06/04/18)
[பகுதி 11](https://minnambalam.com/k/2019/06/07/44)
[பகுதி 12](https://minnambalam.com/k/2019/06/11/10)
[பகுதி 13](https://minnambalam.com/k/2019/06/14/14)
[பகுதி 14](https://minnambalam.com/k/2019/06/18/21)
[பகுதி 15](https://minnambalam.com/k/2019/06/21/19)
[பகுதி 16](https://minnambalam.com/k/2019/06/25/28)
[பகுதி 17](https://minnambalam.com/k/2019/06/28/24)
[பகுதி 18](https://minnambalam.com/k/2019/07/02/15)

(கட்டுரையாளர் **நிவேதிதா லூயிஸ்**, சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர்.எதுவும் யாருக்கும் சொந்தம் இல்லை என்று நம்புபவர். அனைவரும் சரிநிகர் சமமே என்ற கோட்பாட்டைக் கொண்டவர். நாத்திகம் பேசினாலும், வழிபாட்டு தலங்கள், பொது இடங்கள் எல்லாவற்றின் வரலாறு மீதும் அளப்பரிய ஆர்வம் உண்டு. எங்கோ, என்றோ தன் எழுத்து ஒருவரை அமைதியாய் அமர்ந்து சிந்திக்கவைக்கும் என்றால், பண்படுத்தும் என்றால், சோர்வுறும் வேளையில் ஒரு துளி தேனாகும் என்றால், அதுவே தன் பெருவெற்றி என்கிறார். தற்போது ‘அவள் விகடன்’ இதழில் 14 நாள்கள், முதல் பெண்கள் என்ற இரண்டு பத்திகள் எழுதி வருகிறார். வரலாற்றில் பெண்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருகிறார்.)
**
மேலும் படிக்க
**
**[திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/07/01/53)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் – குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!](https://minnambalam.com/k/2019/07/04/74)**
**[இங்கே வந்தால்… அங்கே இருந்தால்…: பட்டியல் போட்ட எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/04/22)**
**[செந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்!](https://minnambalam.com/k/2019/07/04/45)**
**[தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு](https://minnambalam.com/k/2019/07/04/48)**





