மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

இங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி

இங்கே வந்தால்...  அங்கே இருந்தால்...:  பட்டியல் போட்ட எடப்பாடி

அறந்தாங்கி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி ஜூலை 2ஆம் தேதி தன் மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். தினகரன் பக்கம் இருந்த ரத்தினசபாபதி, அதற்காக தனக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் முதல்வரை சந்தித்து விட்டு, சபாநாயகர் தனபாலையும் சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி, ”என்னைத் தொடர்ந்து அவர்களும் வருவார்கள்” என்று கூறினார். அவர்களும் என்று அவர் சொன்னது விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோரை தான்.

அதன்படியே நேற்று ஜூலை 3ம் தேதி விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து அதிமுக ஆட்சி தொடரவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார் . ரத்தினசபாபதி முதல்வரை சந்தித்து விட்டுச் சென்ற ஜூலை 2 ஆம் தேதியே அவர் கலைச்செல்வனோடு பேசியிருக்கிறார். அப்போது கூட கலைச்செல்வன், ‘இப்ப வேணாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்றுதான் சொல்லியுள்ளார்.

ஆனால் ரத்தினசபாபதி விடாமல், ‘நீ என் கூட சிஎம் வீட்டுக்கு வா. அவர் என்ன சொல்கிறார்னு கேளு. அவர் சொல்றதுல இஷ்டம் இருந்தா இந்தப் பக்கம் வா.... இல்லேன்னா நீ இப்படியே இரு’ என்று கூறி நேற்று முன் தினம் இரவு கலைச்செல்வனை எடப்பாடியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசியமாக நடந்த சந்திப்பில் கலைச்செல்வனோடு மனம் விட்டு பேசியுள்ளார் எடப்பாடி.

‘இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஆட்சியை யாரும் எதுவும் பண்ண முடியாது. ஸ்டாலினே பலமுறை முயற்சி பண்ணி பார்த்து விட்டுட்டார். அவரால் முடியவில்லை. நீங்க என்னோட பக்கமிருந்தா, இந்த ரெண்டு வருஷத்துல உங்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் நிறைய இருக்கு’ என்று ஒரு நீண்ட பட்டியலையே வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

மேலும், ‘அங்க தான் போவேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா... நீங்க அனுபவிக்க வேண்டிய பிரச்சினைகளும் நிறைய இருக்கு’ என்று அந்தப் பட்டியலையும் வாசித்திருக்கிறார்.

’ரெண்டுல எது வேணும்னு முடிவு பண்ணிக்கங்க. அப்புறம் தங்கதமிழ்செல்வன் வேற வழி இல்லாமல் திமுக போனமாதிரி நிக்காதீங்க’ என்றும் அறிவுரை சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அப்போது கூட எடப்பாடியிடம் எதுவும் கமிட் ஆகாமல்தான் கலைச்செல்வன் திரும்பியிருக்கிறார். நேற்று முன் தினம் இரவு முழுதும் யோசித்து சில நண்பர்களிடமும் ஆலோசித்து மறுநாளான நேற்று ஜூலை 3 சட்டமன்றம் வந்திருக்கிறார். வந்தவர் ரத்தினசபாபதியிடம், ’ நீங்க சொன்னதும், சிஎம் சொன்னதும் சரிதான். நான் ரெடி ’ என்று சொல்லியுள்ளார். அதன் பிறகுதான் முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து முறைப்படி தன் ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்தார் கலைச்செல்வன்.

மேலும் படிக்க

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு - திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!

10%: தலைவர்களுடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு!

அமமுக அலுவலகம் மாறுகிறதா?

பிகில் பிசினஸ்: அஜித்தை முந்திய விஜய்


வியாழன், 4 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon