அன்னையர் தினம்
உலகம் முழுதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இராமானுஜர் திருநட்சத்திரம்
வைணவ ஆச்சாரியரும் சிறந்த சீர்திருத்த வாதியுமான இராமானுஜரின் 1007 ஆவது திருநட்சத்திர விழா (பிறந்தநாள்) வைணவ ஆலயங்களிலும், மடங்களிலும் இன்று கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் இராமானுஜரின் பிறந்த நட்சத்திரம் ஆகும்.
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதிக வெயில் காரணமாக தன்னை வாழ்த்த தொண்டர்கள் நேரில் வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார் எடப்பாடி. தமிழகம் முழுதும் கூடுதலாக தண்ணீர் பந்தல்களை திறக்குமாறும் கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்றைய ஜில்…
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரையிலான பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஹாட் நியூஸ்…
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் பொதுவான வெப்பநிலை இயல்பை ஒட்டியும், சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக் கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி-41 டிகிரி செல்சியஸ், இதர மாவட்டங்களின் சம வெளிப் பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும்.
இன்றைய ஐபிஎல்
குஜராத் டைடன்ஸிடம் மிகப்பெரிய தோல்வியைக் கண்டு தற்போது 12 புள்ளிகளைப் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பிற்பகல் 3.30க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
மற்றொரு போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூரு டெல்லி கேபிடல்ஸை பெங்களூருவில் இன்று மாலை எதிர்கொள்கிறது.
நாகையில் இருந்து இலங்கைக்கு புதிய கப்பல்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மே மாதம் 13-ந் தேதி முதல் இயக்கப்படும் என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்… அந்த கப்பல் இன்று மதியம் நாகை வந்தடைந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
உலக நர்ஸுகள் தினம்…
செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12-ந் தேதி ஆண்டு தோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு செல்லும் புனித யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில்… நேற்று கேதர்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலின் நடை இன்று காலை திறக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 57 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…