பேரா. நா. மணி
தனியார் கட்டணக் கல்லூரிகள் பிள்ளை பிடிப்பவர்கள் போல் அலைந்து திரிகிறார்கள். அலைபேசியில் துளைத்து எடுக்கிறார்கள். அதிலிருந்து நீங்கள் தப்பித்து இருந்தால் இந்த ஆலோசனைகளையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
•எந்தத் தனியார் கல்லூரி அழைத்துப் பேசினாலும் அவர்கள் பேச்சை கேட்கக் கூடாது. அந்தக் கல்லூரியில் சேர்வதில் உங்கள் நலனைக் காட்டிலும் அவர்கள் நலன் மிகுதி.
•தொழில் கல்வியா? கலை அறிவியல் கல்லூரி படிப்பா? என்பதை முதலில் தீர்மானம் செய்யுங்கள்.
கலை அறிவியல் கல்லூரி தேர்வு

•கலை அறிவியல் கல்லூரியில் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் முதலில் அரசுக் கல்லூரி, இரண்டாவது அரசு உதவி பெறும் கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்.
அரசுக் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பம் இணைய தளத்தில் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு, விருப்பமான கல்லூரிகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த தேதி முதல் பத்து நாட்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
•B.Com, CA போன்று பல்வேறு பெயர்களில் உள்ள பி.காம் கற்பனையிலி்ருந்து வெளியே வாருங்கள். அதற்காக தனியார் கல்லூரியில் பணம் செலவழித்து படிக்க வேண்டாம். அரசு கல்லூரியில், அரசு உதவி பெறும் கல்லூரியில் உள்ள பி. காம்., பி.பி.ஏ போன்ற படிப்புகள் போதும். பி.காம். சி.ஏ உள்ளிட்ட பலவகை பி.காம் களுக்கு என்று எந்த தனி மகத்துவமும் இல்லை.
உங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு செய்யுங்கள். அதை நன்றாகப் படியுங்கள்.
•பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி போன்ற இளநிலை சிறப்புப் பாடத் தேர்வை தவிர்க்க வேண்டும். இளநிலை பட்ட வகுப்பில் பொதுப் பாடங்கள் எடுத்துப் படிக்க வேண்டும். பயோ கெமிஸ்ட்ரிக்கு பதிலாக கெமிஸ்ட்ரி படிக்க வேண்டும். எடுத்தவுடன் சிறப்புப் பாடம் படித்தால் பொதுப் பாடம் படிக்க முடியாது.
எது சிறந்த தனியார் கல்லூரி

•தனியார் சுயநிதி கல்லூரிகளில் எது சிறந்தது? எது கட்டணம் குறைவாக வசூல் செய்கிறதோ அதுவே சிறந்தது. உங்கள் சக்திக்கு ஏற்ற கல்லூரி.
இது சிறந்தது. அது சிறந்தது என்ற மாயையில் சிக்கி கடன் வாங்கி அதிக பணம் செலவு செய்யாதீர்கள்.
கேம்பஸ் இன்டர்வியூ/ பிளேஸ்மெனட்
இது ஒரு மாயை இதனை நம்பாதீர்கள். எல்லாம் அறை குறை வேலைகள். எல்லாம் தற்காலிக வேலைகள். குறைந்த கூலிக்கு சாராக பிழிந்து தள்ளும் நிறுவனங்கள். IIT NITs அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே உண்மையான பிளேஸ்மெனட் நடக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பொறியியல் கல்லூரி தேர்வு

•பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அடிப்படை பொறியியல் பாடங்களை தேர்வு செய்யுங்கள். பி. இ கணினி பொறியியல், சிவில்,மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ், EEE. போன்ற பாடங்களை தேர்வு செய்வது நல்லது. புதிய புதிய பாடங்களில் என்ன எதிர்காலம் என கணிக்க முடியாது. கணிப்புகளை நம்பி சேர்வதை தவிர்க்கலாம்.
•செயற்கை நுண்ணறிவுக்கு என்று தனியாக படிக்கத் தேவையில்லை. அது ஒட்டுமொத்த கணினி அறிவியல்/ தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. அது போன்றதே சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள். அடிப்படை கணினி தொழில்நுட்ப பாடங்கள் போதுமானது.
•எல்லாப் பொறியியல் படிக்கும் மாணவர்களும் கணினி சார்ந்த பணிகளுக்கே செல்கின்றனர். கேம்பஸ் இன்டர்வியூ என்று வரும் நிறுவனங்கள் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் கணினி அறிவியல் படித்தவர்களை மட்டும் வேலைக்கு எடுப்பதில்லை.
அவர்களது தேர்வில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அனைவரையும் எடுத்துக் கொள்கிறார்கள்.
•போட்டி போட்டுக் கொண்டு அழைத்தாலும் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர முறை கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறுவதே நல்லது.
•அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தொழில் கல்லூரிகளின் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
•நல்ல மதிப்பெண் பெற்று பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண்மை கல்லூரிகளில் இடம் கிடக்கும் என்று நம்பிக்கையில் இருப்பவர்கள், கிடைக்கும் கிடைக்காது என்ற சந்தேகம் இருந்தால் கலை அறிவியல் கல்லூரி அல்லது தனியார் கல்லூரிகளில் ஒரு பாதுகாப்புக்காக சேர்க்கை ஒன்று போட்டு வைத்துக் கொள்வது நல்லது.
•உடனடியாக வேலைவாய்ப்புகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் படிக்கலாம். பயாலஜி படித்திருந்தால் மருத்துவம் சார்ந்த பல்வகை படிப்புகள் படிக்கலாம். ஆண்கள் நர்சிங் படித்தால் அதிக வேலை வாய்ப்பு. அதேபோல் ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை,எக்ஸ்ரே என பலவகையான படிப்புகள் தனியார் கல்லூரிகளில் நிறைய உள்ளன. அரசுக் கல்லூரிகளிலும் உள்ளன. அரசு கல்லூரிகள் குறைவு. மருத்துவம் சார்ந்த அரசுக் கல்லூரிகளில் சேர்க்கை காலதாமதம் ஆகும். பாதுகாப்புக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு இடம் பிடித்து வைக்கலாம்.

பொருளாதார சிக்கல் உள்ள மாணவர்கள் கணிதம் பயின்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு இரண்டு வருடங்களில் பாலிடெக்னிக் படிக்கலாம். வேலை பார்த்துக் கொண்டே பின்னர் பி.இ படிக்கலாம்.
குறிப்பு
எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. குறைந்த கட்டணத்தில் படிக்க வேண்டும். அதிக பணம் செலவு செய்தால் நல்ல படிப்பு என்று நினைக்கக் கூடாது. படிப்பை தேர்வு செய்வதில் மாணவர்கள் விருப்பமே மிக மிக முக்கியம். தேர்வு செய்யத படிப்பை ஆழ்ந்து கற்க வேண்டும்.
கட்டுரையாளர்:

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
