சென்னை:
தமிழகத்தில் அரசு வேலை தேடும் இளைஞர்களின் மிகப்பெரிய கனவு என்று சொன்னால் அது ‘குரூப் 4’ தேர்வுதான். சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகி, தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அதே சமயம் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ரேங்க் பட்டியல் வந்தவுடன், “அடுத்து என்ன? கவுன்சிலிங் எப்போது?” என்று லட்சக்கணக்கான கண்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குரூப் 4 பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) வரும் டிசம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தற்காலிகத் தேர்வாளர் பட்டியல் (Provisional List for CV) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1:1.5 விகிதம் – உள்ளே இருக்கும் ‘செக்’:
வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பெயர் வந்தவுடனேயே “வேலை கிடைத்துவிட்டது” என்று யாரும் முடிவெடுத்துவிட வேண்டாம். ஏனெனில், காலிப்பணியிடங்களை விட அதிகமான ஆட்களைத்தான் டிஎன்பிஎஸ்சி அழைத்துள்ளது. அதாவது, ஒரு காலிப்பணியிடத்திற்கு 1.5 நபர் (1:1.5 Ratio) என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும் நிராகரிப்புகள், இடஒதுக்கீடு முறைகளைச் சமன் செய்யவே இந்த முறை பின்பற்றப்படுகிறது. எனவே, சான்றிதழ்களைச் சரியாகச் சமர்ப்பிப்பது மிக மிக அவசியம்.
பதிவேற்றம் செய்வது எப்படி?
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) நடத்தும் இ-சேவை மையங்களுக்கு (e-Seva Centers) மட்டுமே செல்ல வேண்டும்.
தனியார் பிரவுசிங் சென்டர்களிலோ அல்லது சொந்தமாகவோ ஸ்கேன் செய்து ஏற்றக் கூடாது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையை (Memo) பதிவிறக்கம் செய்து, அதனை வைத்துக்கொண்டு இ-சேவை மையங்களில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வாணையம் விடுக்கும் எச்சரிக்கை:
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஒரு விஷயத்தைக் கறாராகத் தெரிவித்துள்ளார். “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (டிசம்பர் 18) சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்களின் விண்ணப்பம் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். அவர்களுக்குக் கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.
அடுத்து என்ன?
இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு, ஆன்லைனிலேயே சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே இறுதி கலந்தாய்வுக்கு (Physical Counselling) அழைக்கப்படுவார்கள். அனேகமாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பணி நியமன ஆணைகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
