மின்வாரிய முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On:

| By Mathi

TNEB Irregularities: DVAC Conducts Raids at 60 Locations Across Tamil Nadu

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 2021- 2023-ம் ஆண்டு அலுமினிய மின் கண்டக்டர் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின்வாரிய மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் ரகசிய விசாரணையை மேற்கொண்டது. இந்த ரகசிய விசாரணையானது, தண்டனைக்குரிய குற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

இதனையடுத்து 30.06.2026 அன்று குற்ற எண். 4/2026 இன் கீழ், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120-பி, 420 மற்றும் 409 மற்றும் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டம்) பிரிவுகள் 13(1)(ஏ) மற்றும் 7(சி) ஆகியவற்றின் கீழ், TANGEDCO/TNPDCL-ன் அடையாளம் தெரியாத அதிகாரிகள், பிற அறியப்படாத அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நபர்கள், ஏலதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் சப்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து, தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தி, கிரிமினல் சதியில் ஈடுபட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் கிரிமினல் முறைகேடு செய்து, அதன் மூலம் அரசு கஜானாவுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

பல சப்ளையர்கள் ஒரே மாதிரியான விலைகளை கோரியுள்ளனர். டெண்டர் ஆவணங்கள் ஒரு பொதுவான IP முகவரியிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளன, இது டெண்டர் செயல்பாட்டில் கூட்டுச் சதி நடந்திருக்கக் கூடும் என்பதைக் குறிக்கிறது.

மேலும், டெண்டர்களில் கோரப்பட்ட இறுதி விலைகள், அரசின் இ மார்க்கெட்ப்ளேஸ் விலைகளை விட அதிகமாக இருந்தன.

ADVERTISEMENT

2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், 2,07,495 KM அலுமினிய கண்டக்டர்களை கொள்முதல் செய்வது தொடர்பாக இந்த முறைகேடு நடந்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தனி நபர்கள், அலுமினிய மின்கடத்தி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஏலதாரர்களின் அலுவலக வளாகங்களில் இன்று (19.08.2026) சோதனைகள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் மொத்தம் 60 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின் போது, டெண்டர் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், பிற குற்றமூட்டும் பொருட்கள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் விவரங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share