மேகமலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரிய ஜான் கென்னடி தொடர்ந்த மனு ஆகியவை இன்று (ஆகஸ்ட் 19) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா ஆஜராகி, ”மேகமலை புலிகள் சரணாலய பகுதியில் 4,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பல குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக உள்ளன. எனவே அவர்களுக்கு சில தளர்வுகள் தேவைப்படுகிறது. மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். மேகமலையில் உள்ள விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற மூன்று மாத கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், ”வனப்பகுதியில் உள்ள விடுதிகளை மூடினால் போதாது. அவற்றை இடித்து தரைமட்டமாக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் அனுமதிக்க முடியாது.
இலவம் பஞ்சுகள் பயிரிடப்பட்ட பகுதிகளையும் உடனடியாக கையகப்படுத்த வேண்டும். ஏனெனில் அங்கு பணிபுரியும் வேலையாட்களை குடியமர்த்துவதில் இருந்து ஆக்கிரமிப்பு தொடங்குகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் நிலத்துக்கான பட்டா வழங்க கூடாது” என்று உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பரமேஸ்வரர் ஆஜராகி, ”ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலரும் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், ”ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும். அங்கு நிலைமையை சமாளிக்க முடியாவிட்டால் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டி இருக்கும். மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நிலை அறிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
