கோவை சிங்காநல்லூர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (59), கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், வேலுச்சாமியின் வீட்டில் இருந்து திடீரென கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவைத் திறந்து பார்த்தபோது, வேலுச்சாமி உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டனர். உடனடியாக உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலுச்சாமி இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேலுச்சாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவா என்பவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பீளமேடு பகுதியில் நவீன், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, இம்மாதத்தில் ஐந்தாவது கொலையாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
