மத்திய அரசின் FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது.
தமிழக சட்டப்பேரவையில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “மசோதாவை திரும்ப பெற வேண்டும். எஃப்.சி.ஆர்.ஏ விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். மதக்கல்வி, மருத்துவம், சமூக அமைப்புகள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். இந்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். எஃப்.சி.ஆர்.ஏ திருத்த மசோதாவிற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது” என தெரிவித்தார்.
இந்த எஃப்.சி.ஆர்.ஏ திருத்த மசோதாவுக்கு எதிரான தனி தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தார். இந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விசிக, மஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து தனி தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
தீர்மானத்தின் மீது பேசிய பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், “மத்திய அரசு கொண்டுவரும் எஃப்.சி.ஆர்.ஏ திருத்தங்கள் வெளிநாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அறக்கட்டளைகளை முறையாக நிர்வகிக்கவே உதவுகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகப் பெறப்படும் நிதி சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் மிகவும் அவசியமானது. எனவே மாநில அரசு கொண்டுவரும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை. அறக்கட்டளையைச் சரியாக நிர்வகிக்க வேண்டும், சமூக திட்டங்களுக்குப் பெறும் நிதி சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றுதான் மத்திய அரசு கொண்டுவருகிறது. இந்த திருத்தம் அவசியம் என்றுதான் பா.ஜ.க நினைக்கிறது. மாநில அரசு கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை” எனக் கூறினார்.
பின்னர் சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தனி தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.
