ஜெய்பீம் திரைப்படம் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரபூர்வமாக தேர்வாகி உள்ளது.
ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியானது முதலே பல சர்ச்சைகளில் சிக்கினாலும் பல அங்கீகாரங்களையும் பெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் 12 ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 13 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு ஜெய்பீம் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெய்பீம் திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் என்று மூன்று விருதுகளை பெற்றுள்ளது. மேலும் தாதா சாஹேப் பால்கே விருதினைப் பெற்றுள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் காட்சிகள் வெளியிடப்பட்டது. இதனால் ஜெய்பீம் ஆஸ்கர் விருதினை வென்றுவிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதற்கட்ட பரிந்துரையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனாலும் பல சர்வதேச அங்கீகாரங்களை குவித்து வருகிறது ஜெய்பீம்.
மோனிஷா
