நடிகர் மம்முட்டிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கேரளாவுக்கு செல்ல வழிகாட்டிய வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்த படத்தை அவரே தயாரிக்கிறார். நிதிஷ் சகதேவன் இந்த படத்தை இயக்குகிறார்.
காரைக்குடியில் நடக்கும் இந்த படப்பிடிப்பு முடிந்து நேற்று அதிகாலை வேளையில் மம்முட்டி, தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி உள்ளிட்டோர் காரில் கேரளா புறப்பட்டனர்.
திருப்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நெடுஞ்சாலை அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மாற்று வழியில் பயணித்துள்ளனர். மேலும் கூகுள் மேப் உதவியையும் நாடியுள்ளனர்.
ஆனால் சரியான பாதை கிடைக்காததால் சுமார் ஒரு மணி நேரம் காரிலேயே அலைந்துள்ளனர்.
இதனால் சோர்வடைந்த நிலையில் மம்முட்டி, “மீண்டும் காரைக்குடிக்கு திரும்பி சென்று விடலாமா… நாளை காலை பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.
ஆனால் அவருடன் இருந்தவர்கள், கேரளாவில் திட்டமிட்ட பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டு விடும் என்று கூறி யோசித்துக் கொண்டிருந்தனர்.
பட்டமங்கலம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் பகுதியில் காரை நிறுத்தி ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் கொசு வலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரிடம் வழி கேட்டு இருக்கின்றனர். அவரும் சில வழிகளை கூறியிருக்கிறார். ஆனால் அவர் சொன்ன வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட வழிகளாக இருந்தன.
இதை கவனித்த மற்றொரு நபர் காரை நோக்கி வந்திருக்கிறார்.
காருக்குள்ளே உற்றுப் பார்த்ததும் உள்ளே மம்முட்டி அமர்ந்திருந்ததை அறிந்து, ‘நீங்கள் மம்முட்டி சார் தானே’ என்று கேட்டுவிட்டு, என்னை பின்தொடருங்கள் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அவர் இருசக்கர வாகனத்தில் முன்னே செல்ல, மம்முட்டியின் கார் அவருக்கு பின்னால் ஃபாலோ செய்து கொண்டு சென்றது.
சுமார் 10 கிலோ மீட்டர் கடந்ததும் மம்முட்டியின் கார் மதுரை செல்லும் நெடுஞ்சாலையை அடைந்தது.
அப்போது அந்த நபர், இந்த வழியாக போனால் நீங்கள் கேட்ட இடம் வந்துவிடும் என்று கைகாட்டி உள்ளார்.
அதிகாலை இருள் சூழ்ந்த நேரத்தில் யார் என்றே தெரியாத அந்த நபர் செய்த உதவி மம்முட்டி மற்றும் படக்குழுவினரை நெகிழ செய்தது.
இந்த சூழலில் ரமேஷ் பிஷாரடி, அவர் நல்ல மனிதராக இருக்கிறார். இரவு நேரத்தில் உங்களுக்கு (மம்முட்டி) உதவியதாக அவர் யாரிடமாவது சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் என்று கூற, உடனடியாக காரில் இருந்து இறங்கிய மம்முட்டி, அந்த நபரின் செல்போனை வாங்கி புகைப்படம் எடுக்க சொல்லி இருக்கிறார்.
அதன்படி தனக்கு வழிகாட்டிய நபரின் தோளில் கை போட்டு , “நம்ம நண்பர்” என்று மம்முட்டி போஸ் கொடுக்க, அதை ரமேஷ் பிஷாரடி போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் மம்முட்டி அந்த நபரிடம், ’உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்க பாண்டியன் என்று பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஆண்டோ ஜோசப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் காரில் பயணிக்கும் போது, ”சொந்தம் என்ன பந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன, உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம்
நான் இல்லை ஹோய்” என்ற தளபதி பட பாடலையும் பாடியது பதிவாகியுள்ளது.
மம்மூட்டிக்கு உதவிய பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அவங்க வழி தெரியாம பெட்ரோல் பங்க்ல நின்னப்ப, அங்க இருந்தவங்க சரியா வழி சொல்லல. நான் பக்கத்துல படுத்துருந்தேன்; எந்திரிச்சு போய், ‘என்ன சார் வேணும்?’னு கேட்டேன். மதுரைக்கு போகணும்னு சொன்னாங்க. நான் வழி சொல்லியும் புரியல. அதன் பிறகுதான் அவர்களை கூட்டிட்டு போனேன்.
என்னை கட்டி அணைச்சு, ‘என்னோட ஃபிரண்ட்’னு சொல்லி போட்டோ எடுத்துக்கிட்டாரு மம்முட்டி சார். அம்புட்டு பெரிய சூப்பர் ஸ்டார் என்னை ஃபிரண்ட்னு சொன்னதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். ரொம்ப பெருமையா இருக்கு.
அந்த வீடியோவை அவங்களே சோஷியல் மீடியால போட்டதும், லட்சக்கணக்கான பேர் பார்த்துட்டு சொந்தக்காரங்க எல்லாம் போன் பண்ணி பேசுறாங்க. அவ்வளவு பெரிய இடத்துல இருந்தும் ரொம்ப எதார்த்தமா என்கிட்ட பேசுனாரு. கடவுள் அவரை நல்லா வச்சிருக்கணும்!” என மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
