திருப்பரங்குன்றம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி கனிமொழி, டிஆர் பாலு, திருச்சி சிவா, ஜோதிமணி நோட்டீஸ்

Published On:

| By Mathi

Parliament Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டிஆர் பாலு, திருச்சி சிவா மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் பாரம்பரியமாகவும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் மதுரையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க கோரி திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதே போல காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இது பற்றி ஜோதிமணி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், ”நாடாளுமன்றத்தில் இன்று திருப்பரங்குன்றம் பிரச்சினையை விவாதிக்கக் கோரி ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளேன். அமைதியான தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க திருப்பரங்குன்றத்தில் மதவாத சக்திகள் தமது அரசியல் நலன்களுக்காக பதற்றத்தை,வன்முறையை,கலவரத்தை தூண்டுவதை அவசரமாக விவாதிக்க இன்று நாடாளுமன்ற மக்களவையில். ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ்.பாஜக வின் மதவெறி,வன்முறை அரசியலை களத்தில் மட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதியோடு எதிர்க்கும். இந்தியா கூட்டணி தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வலிமையோடு போராடும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திருச்சி சிவா கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், தமிழ்நாட்டில் மத மோதல் மற்றும் பிரிவினையை தூண்டும் வகையில் ஒரு கும்பல் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share