தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 14) ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். thirumavalavan sitting happily on the stage
அடுத்ததாக , சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ அம்பேத்கரை உயர்த்திப் பிடித்து கொண்டாடும் இயக்கம்தான், திராவிட இயக்கம்! அவர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை 1930-ஆம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார்! அதுமட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை, அவர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கின்ற மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்கம் போராட்டம் நடத்திய காலகட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என்றார்.

எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தது குறித்து பேசிய ஸ்டாலின், “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கிப் படித்தவர் தான். அதை திறந்து வைத்துவிட்டு அந்தக் கட்டிடத்தை சுற்றிப்பார்த்தோம். சுற்றிப்பார்த்த நேரத்தில் தன்னையே மறந்து அவர் சொன்னார் – இங்கே தங்கி, மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் படிக்கலாம் போல தோன்றுகிறது என்று சொன்னார். இன்றைக்கு எல்லாருக்கும் அரசியல், சமூக அறிவியல் பாடம் சொல்லித் தருகின்ற சிந்தனையாளராக, கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்!
இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும்” என்று அறிவித்தார்.
மேலும் அவர், “எதிரிகளையும் – எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். இந்தச் சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே என்ற கவலை கிடையாது. அவர்களுடைய எண்ணம் “நீங்கள் மாற்றத்தை விதைத்துவிட்டதாக, பண்படுத்திவிட்டதாக பெருமைப்படுகின்ற மண்ணில் இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது” என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு!
நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம்! சமூகப் பணிகளாலும், சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆகவேண்டும்” என்று குறிப்பிட்டார். thirumavalavan sitting happily on the stage