தோழமைக் கட்சிகளின் ஆதரவை புறந்தள்ளும் நோக்கில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருக்க வாய்ப்பு இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
நெல்லையில் நேற்று அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, எங்களுடைய தயவில் தான் இன்னும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அவர்களுடைய தயவெல்லாம் இல்லை. பெண்கள், வாக்காளர்கள், மக்களின் தயவில்தான் ஆட்சி அமைத்திருக்கிறோம். திமுகவுக்கு மெஜாரிட்டி இருந்ததா. 96 எம்எல்ஏக்களோடு ஆட்சி அமைத்த போது மைனாரிட்டி திமுகவாகதானே இருந்தது.
108 எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து கேபினெட்டில் இடம் கொடுத்து நாங்கள் கொண்டு போகிறோம். இதில் யார் தயவும் யாருக்கும் தேவையில்லை.
அவர்கள் கூட்டணி கட்சிகளிடம் ஒரு பண்ணையார் மனப்பான்மையில் இருந்தார்கள். காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஓட்டுகள் இல்லாமல் இத்தனை நாள் அவர்களால் ஆட்சி அமைத்திருக்க முடியுமா? இத்தனை நாட்களில் சுதந்திர இந்தியாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏன் ஒரு கேபினட் கூட கொடுக்கவில்லை.
எங்கள் தலைவர் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி அதை செய்து காட்டியிருக்கிறார்.
எங்களுடைய முதல்வரை பொருத்தவரை மக்களின் தயவில் தான் ஆட்சி நடக்கிறது. வேறு யாருடைய தயவும் இல்லை” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 21) கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை இடங்களைத் தந்திருக்கிறார்கள், வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை, ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்கள் அவர்களுக்கு போதாத இடங்கள் எவ்வளவோ அந்த இடங்களுக்கு ஆதரவாக நாங்கள் கை கோர்த்திருக்கிறோம்.
ஆகவே, மக்களுடைய மேண்டேட்… அவர்கள் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்கிற பொருளில் அமைச்சர் அந்தக் கருத்தைக் கூறியிருக்கலாம். தோழமைக் கட்சிகளின் ஆதரவை புறந்தள்ளும் வகையில் அவர் பேசியிருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய ஆதரவில்லாமல் நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்கிற பொருளில் அவர் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று நான் நம்புகிறேன். எனவே அதை பெரிதாக்க வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்.
