மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு வழக்கு : நீதிமன்றம் சொன்னது என்ன?

Published On:

| By Kavi

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கு தடை விதிக்க கேட்டு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

“தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்க வேண்டும். 

ADVERTISEMENT

இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மதிகாரி மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்டம்பர் 21) விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது மனுதாரர் சார்பில், “எவ்வித காரணமும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களில் ராஜினாமா செய்த விட்டு வேறொரு கட்சியில் இணைந்து வேட்பாளராக தேர்தலில் நிற்கின்றனர். அவர்களிடம் தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க வேண்டும். 

இதற்கு எந்த சட்டமும் இல்லாததால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும். ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தால் அதில் கேள்வி எழுப்ப போவதில்லை. மாறாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால் இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் செலவு வசூலிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வராவிட்டால் ஒட்டுமொத்தமாக அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால் என்ன ஆகும் என்று வாதிடப்பட்டது. 

அதேசமயம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதிகள், “ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் இருந்து தேர்தல் செலவு வசூலிப்பது தொடர்பாகவும், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில் நீதிமன்றம் சட்ட திருத்தம் கொண்டுவர முடியுமா? 

நாடாளுமன்றத்தில் தானே சட்டம் இயற்ற முடியும்… அந்த சட்டம் சரியானதா இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். 

சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது. 

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது முந்தைய தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட விவரங்களை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம். 

ஆனால் அந்த செலவை போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் முடியாது என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share