ஜெம் வீரமணி வழக்கு: கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அமைச்சர் கேட்பதுதான் ஆச்சரியம் – பெ.சண்முகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Raj mohan

தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் சமரசமில்லாமல் நாங்கள் போராடி வந்திருக்கிறோம். இதனால் வீரமணி மீதான போக்சோ வழக்கில் எங்களது கருத்து என்னவென்று அமைச்சர் ராஜ்மோகன் கேட்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் தோழர்களின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சிக் காலத்தில் அது மூடி மறைக்கப்பட்டது; அதை அவர்கள் கண்டிக்கிறார்களா, இல்லையா? என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “எல்லா ஆட்சிக் காலத்திலும் புகார் அளிக்கப்பட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயங்கள் தற்போது வெளிவருகின்றன. தமிழக அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்: கடந்த ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலங்களில் புகார் அளிக்கப்பட்டு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? அல்லது புகாரைப் பெற்ற சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அன்றைக்கு இருந்த ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யார் மூலம் அழுத்தம் வந்தது?

இவ்வளவு குழந்தைகளைப் பல்வேறு காலகட்டங்களில் அழைத்து, இதுபோன்ற பாலியல் குற்றங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார் என்றால், இது மிகப்பெரிய அளவில் பாலியல் மோசடி நடந்திருப்பதற்கான எடுத்துக்காட்டு. இதில் வீரமணி மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை. இதில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், அன்று அழுத்தம் கொடுத்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் யார், இதையெல்லாம் மூடி மறைப்பதற்கு யார் யாரெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விடக் கூடுதலாகத் தலையிட்ட வேறு ஒரு கட்சியைத் தமிழ்நாட்டில் சொல்லுங்கள்? எங்கே குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் களத்தில் இல்லாத ஒரு வழக்கைக்கூட நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது. அந்த அளவிற்கு உறுதியாகப் போராடி வந்திருப்பவர்கள் நாங்கள். ஆகவே, இதன் மீது எங்களது கருத்து என்னவென்று அமைச்சர் கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த மாதிரியான விஷயங்கள் மட்டுமல்ல; பெண்கள் மீதான வன்கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் சமரசமில்லாமல் நாங்கள் போராடி வந்திருக்கிறோம். இந்தப் பிரச்சினையிலும் வெறும் வீரமணி என்கின்ற ஒரு நபரோடு இந்த வழக்கைச் சுருக்கிவிடக் கூடாது. இந்த விவகாரம் எந்தெந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறதோ, எல்லா காலத்திலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், இவரோடு சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் விரிவான முறையில் இந்த விசாரணையும் வழக்கும் நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share