ஜெம் வீரமணி வழக்கு … அவதூறு பரப்பினால் வழக்குத் தொடருவோம் : என்.ஆர்.இளங்கோ

Published On:

| By Kavi

கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியின் பாலியல் வழக்கு விவாகாரம் பூதாகரமாகியுள்ளது. 

2025 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்ட போதிலும் திமுக ஆட்சியில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ADVERTISEMENT

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், ”திமுக ஆட்சியில் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு தெரியாமல் இதை மூடி மறைத்திருக்க முடியாது. இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்”என கூறியிருந்தார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 21) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “

ஜெம் கிரானைட் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு குறித்து, அது ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார்.

ADVERTISEMENT

அது முற்றிலும் தவறான கருத்தாகும். ஏனென்று சொன்னால், 07/11/2025-இல் பதியப்பட்ட அந்த வழக்கு, அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, அப்போதைக்கு கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல் புலன் விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால் நீதிமன்றத்தில், ‘இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை, இந்த வழக்கினை நாங்கள் கைவிடவில்லை, உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல் விசாரணையை தள்ளி வைத்திருக்கிறோம்’ என்று  குறிப்பிட்டு போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதுவும்கூட அப்போதைக்கு இருந்த அடிஷனல் டைரக்டர் ஆஃப் பப்ளிக் ப்ராசிகியூஷன் என்பவருடைய கருத்துரையின் அடிப்படையில் அது தாக்கல் செய்யப்பட்டது.

எனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்த வழக்கு, புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல் புலன் விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை மறைத்து அவதூறான கருத்துக்களை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார்.

குறிப்பாகச் சொல்லப்போனால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாடு, குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதன் மூலம் நிர்மல் குமார் எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றி விடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது. ஏனென்று சொன்னால், இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாக சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்சினை என்பது போல் இருக்கிறது என்று அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையைக் கொடுப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

அவதூறு பரப்பினால் அந்தக் குற்றத்துக்கு அவர் உட்பட்டவர் தான். இதற்கான உரிய நடவடிக்கையை திமுக தொடரும் . அதுமட்டுமின்றி பாலியல் வழக்கை திசை திருப்பியதற்காகவும்  குற்றவாளிகளை தப்ப காரணமாக இருந்ததற்காக அவர்கள் மீதும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம்” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share