விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியது குறித்த திருமா விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Thirumavalavan Vijay

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. ஆனால் தவெக ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி இன்று தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளது. விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவுக் கடிதத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இந்நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தவெக தலைவர் விஜய் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து அதுகுறித்த நிலைப்பாட்டை மேற்கொள்வோம்” என்றார்.

மேலும் அவர், “காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவளித்திருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட சுதந்திரம். அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. இடதுசாரி கட்சிகளோடு விசிக நீண்டகாலமாக கருத்தியல் அளவில் ஒருங்கிணைந்து பல்வேறு தளங்களில் கைகோர்த்துள்ளோம்.

ADVERTISEMENT

நேற்று மார்க்சின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வருங்கால அரசியல் தொடர்பாக இடதுசாரிகளுடன் இணைந்து நாங்கள் செயல்பட இருக்கிறோம். முக்கிய முடிவுகளை அவர்களுடன் கலந்தாலோசித்து எடுப்போம் என்று தெரிவித்திருந்தேன். கம்யூனிஸ்டுகள் இதுகுறித்து என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.

எங்களது கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் பேசிய பிறகு எங்கள் முடிவை அறிவிப்போம்.

ADVERTISEMENT

விஜய் கடிதம் அனுப்பியதில் இருந்து யாராவது ஆதரவு அளித்தால் போதும் என்று கருதவில்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருப்பதன் மூலம் அதிமுக பாஜக அணியோடு உறவாட விஜய் விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share