மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அடுத்தடுத்து நடந்த 2 விபத்துகளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் அருகே ஆலத்தூரிலிருந்து சிவகாசியில் நடைபெறும் திருமண நிகழ்விற்காக மினி பேருந்தில் 30 க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். மதுரை – கப்பலூர் சுற்றுச்சாலையில் மினி பேருந்து வந்து கொண்டிருந்தது பேருந்து அதிகாலை 5 மணியளவில் இந்தியன் எண்ணெய் நிறுவனம் அருகே உள்ள பாலத்தில் ஏற முயன்ற போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில் மினி பேருந்து சாலை தடுப்பை தாண்டி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி பேருந்தில் வந்த நாகப்பட்டினம் தாலுகா ஆலத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த பூங்கொடி, மதியழகன், இளையராணி, ஜோதி, சுதாகர் உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேர் மேல்சிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் காரணமாக கப்பலூர் – மதுரை பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இரு பாலங்களில் ஒரு பாலம் முற்றிலும் தடைபட்டதால் மற்றொரு பாலத்தில் போக்குவரத்தை மாற்றி வாகனங்களை செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதை அடுத்து வாகனங்கள் மற்றொரு பாலத்தில் சென்றபோது மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த இருசக்கர வாகனம் எதிர் திசையில் வந்த மினி பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நெல்லை மாவட்டம் பள்ளிக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் 26 பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
