தந்தைக்கு எதிராக ஆந்திரா போலீசாருக்கு 6 வயது சிறுவன் உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். போலீசார் வாகன சோதனை நடத்திய போது சுரேஷின் இரு சக்கர வாகனத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லை. இதனால் சுரேஷின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனால் சுரேஷ், போலீசாருக்கு தெரியாமல் வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து தமது வீட்டுக்கு அருகே மறைவிடத்தில் பதுக்கி வைத்தார்.
இந்நிலையில் சுரேஷை தேடி போலீசார் அவரது ஊருக்கு வந்தனர். அப்போது, போலீசாரிடம் சுரேஷின் 6 வயது மகேந்திரன், “எங்க அப்பா பைக்கை பதுக்கி வெச்சிருக்கிற இடம் எனக்கு தெரியும்.. நீங்க வாங்க சார்.. எங்க அப்பாவை பிடிச்சுட்டு போங்க” என சொல்லியபடியே போலீசாரை கையோடு அழைத்துச் சென்று பைக் பதுக்கிய இடத்தை காட்டிக் கொடுத்தான்.
இந்த வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தந்தைக்கு எதிராக துணிச்சலாக வழிகாட்டியதால் போலீசார் அந்த சிறுவன் மகேந்திரனுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.
