VIDEO: ஒரு செல்போன்.. 3 மணி நேர போராட்டம்.. ஒரே குடும்பத்தின் 3 உயிர்கள் பறிபோன துயரம்!

Published On:

| By Mathi

Tragic Cost of a Smartphone: 3 Lives Lost After a 3 Hour Ordeal

மகாராஷ்டிராவில் ஒரு செல்போனுக்காக ஒரே குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் ஜால்டா பாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளிதர்- சங்கீதா தம்பதி. இவர்களது ஒரே மகன் குணால் (வயது 19).

ADVERTISEMENT

தமது பெற்றோரிடம் குணால், ஐபோன் கேட்டு அடம்பிடித்துள்ளார். ஆனால் பெற்றோர், ஐபோன் வாங்கி தர மறுத்துவிட்டனர். இதனால் பெற்றோருடன் தகராறு செய்த குணால், வாலூஜ் திஸ்காவ் என்ற பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்று, தாம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வாலூஜ் திஸ்காவ் பகுதிக்கு குணாலின் பெற்றோரும் அப்பகுதி மக்களும் சென்றனர். அப்போது மலை உச்சியில் நின்று கொண்டிருந்த குணாலிடம் பெற்றோர் சமாதானமாக பேசிப் பார்த்தனர். அப்பகுதியில் இருந்தவர்களும் பெற்றோரும் புதிய செல்போன் வாங்கி தருவார்கள் என உறுதி அளித்தனர். ஆனாலும் மலை உச்சியில் இருந்து குணால் இறங்கி வர மறுத்துவிட்டார். அத்துடன் யாராவது தமது பக்கத்தில் வந்தால், மலையில் இருந்து கீழே குதித்து விடுவேன் எனவும் மிரட்டினார்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் குணால் நின்ற இடத்துக்கு கீழே வலையை விரித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் மலை உச்சியில் ஒவ்வொரு இடமாக குணால் நகர்ந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு துறையினர் அந்த முயற்சியை கைவிட்டனர்.

குணாலிடம் அவரது பெற்றோர், அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் தொடர்ந்து போராடிப் பார்த்தனர். ஒரு கட்டத்தில் மகன் குணாலை நோக்கி சட்டென சென்ற முரளிதர் கையை பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் குணால் மலையில் இருந்து சட்டென குதிக்க, தந்தையும் மகனும் ஒரு சேர 500 அடி பள்ளத்தில் கீழே விழ இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

தமது கண் முன்னே கணவரும் மகனும் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்ததை பார்த்த சங்கீதா அதிர்ச்சியில் உறைந்தார். அவரும் சட்டென மலையில் இருந்து கீழே குதிக்க, உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே ஒரு செல்போனுக்காக அப்பா- அம்மா- மகன் என ஒரு குடும்பத்தின் மொத்த உயிரும் பறிபோன துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share