ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் பிஎஸ்ஓ இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை சரியாக விநியோகிக்க முடியவில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பிஎஸ்ஓ இயந்திரங்களை ரேஷன் கடை ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிஎஸ்ஓ இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்தால்தான் பயனாளிகள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும்.
இந்த இயந்திரம் வழங்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது அதில் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக பயனாளிகளுக்கு பொருட்களை விநியோகிப்பதில் பிரச்சினைகள்ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் இன்று பிஎஸ்ஓ இயந்திரங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு, இன்று காலை தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்தனர்.
சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பிரகாஷ் தலைமையில், வட்ட செயலாளர் பி.லோகநாதன், வட்ட பொருளாளர் ஏ.ரவி, மாவட்ட இணை செயலாளர் எம்.சிவகுருநாதன் முன்னிலையில் பணியாளர்கள் 91 கடைகளில் இருந்து இயந்திரங்களை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
கடந்த 15 நாட்களாக பிஎஸ்ஓ இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் சரியாக வேலை பார்க்க முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்று, சாத்தூர், உளுந்தூர்பேட்டை, கரூர், கமுதி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ்ஓ இயந்திரங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் புதிய பிஎஸ்ஓ இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
