கேஸ் சிலிண்டர் விபத்தில் 7 பேர் பலி.. நிதி உதவி வழங்குமா அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

பெரம்பலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு நிதி உதவி வழங்க முன் வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாச்சலம் என்பவருக்குச் சொந்தமான டீக்கடையில், கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உருவானது. இதில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால், சுமார் 10 மீட்டர் தூரத்திற்குத் தீ பரவி 16 பேர் வரை காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் திருச்சி மற்றும் கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் மணிகண்டன், தினேஷ், சகாதேவன், ஆறுமுகம், புவனேஸ்வரி, விஜயகுமார், சிவக்குமார் என இதுவரை 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தின் போது கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த 17 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து தமிழக அரசு தரப்பில் இரங்கல் தெரிவிக்கவோ, நிவாரண நிதி அளிக்கப்படவோ இல்லை. இது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில் பெரம்பலூர் இளைஞர் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையிலும், இதுவரை தமிழக அரசு இரங்கல் தெரிவிக்கவோ நிவாரண நிதி வழங்கவோ இல்லை. எனவே, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share