திண்டிவனத்தில் ராமதாஸ் – அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே சமரசத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில் வன்னியர் சங்க அலுவலகத்திற்கு இன்று (செப்டம்பர் 12) சீல் வைக்கப்பட்டது.
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் நேற்று அறிவித்தார். எனினும் இந்த அறிவிப்பு அறிவிப்பு செல்லாது என்று அன்புமணி தரப்பு பாமக வழக்கறிஞர் பாலு நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதற்காக வன்னியர் சங்க அலுவலகத்தை தயார் செய்யவதற்காக அன்புமணி தரப்பு மாவட்ட செயலாளரான மொ.ப.சங்கர் போலீசாரிடம் நேற்று மனு கொடுத்தார். இதையறிந்த ராமதாஸ் தரப்பு விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வந்து பூட்டு போட்டு பூட்டிவிட்டார்.
இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று மதியம் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் இரு தரப்புக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் இதுவரை ஏற்படாத நிலையில், வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் தற்போது சீல் வைத்தனர்.
