பொங்கல் திருநாளில் நடக்கவிருந்த இஸ்ரோ தேர்வு ஒத்திவைப்பு: சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை ஏற்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வை (CBT) பொங்கல் திருநாளான வரும் 2026 ஜனவரி 15 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில்,“ஜனவரி 15 என்பது தமிழகத்தின் மிக முக்கியத் திருவிழாவான பொங்கல் திருநாளாகும். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்குப் பின்வரும் காரணங்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

போக்குவரத்துத் தட்டுப்பாடு: பொங்கல் திருவிழா காலத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்து மிகக் கடுமையான நெரிசலைக் கொண்டிருக்கும். இதனால் தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையங்களை அடைவது சாத்தியமற்றது.

கலாச்சார உணர்வு: பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். இந்த நாளில் தேர்வு நடத்துவது தேர்வர்களின் கலாச்சார உரிமையைப் பறிப்பதாகும்.

ADVERTISEMENT

முரண்பாடான நடைமுறை: தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் (IPRC) பொங்கலுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில், மற்றொரு மையமான VSSC தேர்வை அறிவித்திருப்பது நிர்வாக முரண்பாட்டைக் காட்டுகிறது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்கள் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகளை அமைப்பது வழக்கம். எனவே, தமிழக தேர்வர்களின் நலன் மற்றும் நியாயமான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 15-ல் நடைபெறவுள்ள இத்தேர்வை மற்றொரு தேதிக்குத் தள்ளிவைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது தேர்வுகள் மாற்று தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் பதிவில்,“பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்டிருந்த இஸ்ரோவின் தேர்வு ரத்து.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான (VSSC) தேர்வுகள் பொங்கல் திருநாளான ஜன;15 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றச்சொல்லி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தேர்வர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்”இவ்வாறு கூறியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share