’தில்லானா மோகனாம்பாள்’ எனும் திரைக் காவியம்!

Published On:

| By Mathi

The Epic Cinematic Masterpiece - Thillana Mohanambal

தமிழ் திரை உலகின் சரித்திரத்தில் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ஏராளமான “பொக்கிஷங்களாக” படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.. இந்த வரிசையில் பெருமிதத்துடன் பேசப்படுகிற படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ (Thillana Mohanambal). 1968-ம் ஆண்டு இதே ஜூலை 27-ந் தேதி வெளியான திரைப்படம்.

கொத்தமங்கலம் சுப்பு

ஆனந்த விகடனில் எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு தொடராக எழுதிய நாவலின் தழுவல்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’.

ADVERTISEMENT

சிவாஜி- பத்மினி

ஏ.பி. நாகராஜன் இயக்கிய இந்தப் படத்தில், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் ‘சிக்கல்’ சண்முகசுந்தரமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; பரத நாட்டிய பெருங் கலைஞர் மோகனாம்பாளாக பத்மினி ஆகியோர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த இரு கலைஞர்களிடையேயான காதல், ஈகோ, ஊடல் என அத்தனையுமே வெகு சிறப்பாக இடம் பெற்றிருக்கும். இதுதான் படத்தின் சாராம்சம்.

ADVERTISEMENT

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி சீன் வரை அப்படியே ரசிகர்களை கட்டிப் போட்டு உட்கார வைத்த திரைப்படம்.

மிரட்டலான சிவாஜி நடிப்பு

சிவாஜி கணேசன் இந்த படத்தில் நாதஸ்வரம் வாசிக்கும் விதம், அவருடைய உதடுகளின் அசைவுகள், விரல்களின் வித்தைகள் அத்தனையையும் அழகாக வெளிப்படுத்தி உண்மையான நாதஸ்வர கலைஞராகவே தன்னை அடையாளப்படுத்தி இருப்பார்.

ADVERTISEMENT

மோகனாம்பாள் மீதான காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதுடன், தன்னுடைய சுயமரியாதைக்கு சவால் விடும் போது காட்டுகிற ஆவேசமும் அடேங்கப்பா.. சிவாஜி சிவாஜிதான் என்று சொல்ல வைக்கும்.

சிவாஜிக்கு பெரும் சவால் விட்ட பத்மினி

சிவாஜிக்கு சரியான, சவாலான ஜோடி பத்மினிதான்.. அப்படிதான் நடனத்திலும் சரி, சிவாஜியிடம் முரண்டு பிடிக்கும் காதலியின் பாவனைகளிலும் சரி, நளினமும் திமிரும் கலந்த அட்டகாசமான நடிப்பை கொட்டித் தீர்த்திருப்பார் நாட்டியப் பேரொளி பத்மினி. அதுவும் இருவருக்கும் இடையே போட்டி நடைபெறும் சீன்கள் மிரட்டல்..

நடிகர் பட்டாளம்.. ஜில் ஜில் ரமாமணி

இந்த இருவர்தான் என்றில்லை.. முத்துராக்கு என்கிற தவில் வித்வானாக டி.எஸ். பாலையா.. நினைத்து பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு இயல்பாகவே வந்துவிடும்.. அப்படி ஒரு யதார்த்தமான நகைச்சுவை.

’என்ன நான் சொல்றது?’ ‘வடிவு….’ என இழுக்கிற சவடால் வைத்தியையும் எலுமிச்சை பழத்தையும் எப்படி மறந்துவிட முடியும்?

இவர்களுக்கு இணையான ”ஜில் ஜில் ரமாமணியாக” துள்ளல் ஆட்டம் போட்ட ஆச்சி மனோரமா..

பத்மினியின் தாயார்- வில்லியாக வடிவாம்பாள் பத்திரத்தில் நடித்த சிகே சரஸ்வதியின் முகபாவனைகள் அப்படியே காலம் கடந்தும் கண்முன்னே வந்து போகின்றன.

மதன்பூர் மகாராஜாவாக நம்பியார், சிங்கை மைனர் செல்லத்துரையாக பாலாஜி என ஏராளமான நடிகர் பட்டாளங்கள் திரண்டு திரையில் காட்சி தந்தனர்.

காவியக் கவிஞர் கண்ணதாசன்

இப்படத்தின் ஆகப் பெரும் பலமாக இருந்தது கே.வி. மகாதேவனின் இசை. காலந்தோறும் போற்றும் மாபெரும் கவிஞர் கண்ணதாசனின், “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”, ”நலந்தானா” பாடல்கள் எல்லாம் எப்படி மறந்து போகும்?

ஆண்டுகள் உருண்டோடினாலும் சிக்கல் சண்முகசுந்தரத்தையும் மோகனாம்பாளையும் ரசிகர்கள் இன்றும் கொண்டாடிக் கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் இப்படத்தில் உள்ள கலை நயமும், உயிர்ப்பான நடிப்பும்தான்..

”என் உயிர் உள்ளவரை.. உன் ஞாபகம் என் நெஞ்சில் இருக்கும்” என சிவாஜி வசனம் பேசுவதைப் போல

தமிழ் சினிமா உள்ளவரை தில்லானா மோகனாம்பாள் ஒரு பெருமைமிக்க காவியமாக நிலைத்து நிற்கும்!

தில்லானா மோகனாம்பாளும் சுவாரசியங்களும்

  • ஆனந்த விகடன் வார இதழில் கொத்தமங்கலம் சுப்பு ‘கலைமணி’ என்ற புனைப்பெயரில் எழுதிய இத்தொடர்கதை, 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்தது.
  • தில்லானா மோகனாம்பாள் கதாபாத்திரத்திற்காக கொத்தமங்கலம் சுப்பு மனதில் நினைத்தது இளம் நாட்டியக் கலைஞர் பந்தநல்லூர் ஜெயலட்சுமியைத் தானாம். அதேபோல், சிக்கல் சண்முகசுந்தரம் கதாபாத்திரத்துக்கு நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்கள்தான் அடிப்படையாம்.
  • இக்கதையைத் திரைப்படமாக்க ஜெமினி எஸ்.எஸ். வாசன் மற்றும் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இடையே கடுமையான போட்டி இருந்தது. எஸ்.எஸ். வாசன் தாமதித்ததால், ஏ.பி. நாகராஜன் அவரிடம் நேரடியாகப் பேசி படத்தின் உரிமையை வாங்கினார்.
  • கதைக்காக ஆனந்த விகடன் நிறுவனத்துக்கு ஏ.பி. நாகராஜன் 25,000 ரூபாய் கொடுத்தார். பின்னர் கொத்தமங்கலம் சுப்புவைச் சந்தித்து 10,000 ரூபாய் சன்மானம் வழங்கினார். ஆனால் சுப்புவோ திருப்பி கொடுத்துவிட்டார். ஆனந்த விகடனுக்கு கொடுத்த பணம்தான் எனக்கான பணம் என்று சொல்லிவிட்டார் சுப்பு.
  • கொத்தமங்கலம் சுப்பு டகடைசி வரை ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தை பார்க்கவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இக்கதையை ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’ மூலமாக எஸ்.எஸ். வாசன் தயாரிக்க வேண்டும் என்பதே சுப்புவின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை என்ற ஏக்கம்; அதோடு அவரது முதுமை, கண் அறுவை சிகிச்சை ஆகியவையும் காரணமாக சொல்லப்படுகிறது.
  • நாகேஷ் கதாபாத்திரமான சவடால் வைத்தி வேடத்தில் தாமே நடிக்க விரும்பினாராம் கொத்தமங்கலம் சுப்பு. தன்னை தானே ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி எழுதி உயிர் கொடுத்துவிட்டு இன்னொருவரை அந்த இடத்தில் வைத்து பார்க்க விரும்பாமல் கொத்தமங்கலம் சுப்பு இந்த படத்தை பார்க்கவில்லை என்கிற கருத்தும் உண்டு.

அண்ணாவும் கண்ணதாசனும்

”நலந்தானா..
நலந்தானா..
உடலும் உள்ளமும் நலந்தா..னா
நலம் பெற வேண்டும் நீ என்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு”

இப்படத்தின் காலகட்டத்தில், தமிழகத்தின் முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அண்ணாவுடன் கருத்து வேறுபட்டு கண்ணதாசன் விலகி நின்ற காலம் அது.

ஆனாலும் அண்ணாவின் உடல்நலன் பாதிக்கப்பட்டதால் ’மாஜி’ தம்பி கவிஞர் கண்ணதாசன் தனக்கே உரித்தான பரிதவிப்புடன் அண்ணாவிடம் நலம் விசாரிக்கிற பாடலாகவே “நலந்தானா” பாடல் பார்க்கப்பட்டது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share