திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கான நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் அணைகளில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கரையோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக இன்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடருவதால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
