வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து தான் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இன்று (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளார். there is no coalition government
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசிய தம்பிதுரை, “1998-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை எடுத்தார். இதுதொடர்பாக நான் தான் புவனேஷ்வருக்கு சென்று வாஜ்பாய், அத்வானி ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவின் கூட்டணி முடிவு குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.
உடனே வாஜ்பாய் ஆச்சரியமாக, ‘திராவிட கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வருவது உண்மையா?’ என்று கேட்டார். ‘திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக உங்களுடன் கூட்டணி வைக்கிறோம்’ என்று வாஜ்பாயிடம் சொன்னேன்.

அதேநேரத்தில், காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக, பாஜக கூட்டணியில் சட்ட அமைச்சராக இருந்த நான் உள்பட அதிமுக எம்.பி-க்கள் ராஜினாமா செய்தோம்.
நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஐந்து ஆண்டு காலம் திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். கலைஞர் பாஜகவுடன் ஏற்படுத்திய அந்த கூட்டணி, பொருந்தும் கூட்டணியா அல்லது பொருந்தாத கூட்டணியா என்று ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்.
பின்னர் 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தார்கள். எனவே, சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது திமுகவின் கொள்கை ஆகும். தமிழகத்தின் நலனுக்காக, கொள்கைக்காக மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும்.
அமித்ஷா தமிழகம் வந்தபோது திமுகவில் 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். திமுக நிர்வாகிகள் இதுவரை ஏன் இதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருக்கிறார்கள்? அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரும் ஸ்டாலினுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்ய தைரியம் இருக்கிறதா?
கூட்டணி விவகாரத்தில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சரியான முடிவு எடுத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என்று சிலர் சொல்கிறார்கள். வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் நான்கு பேரும் வாக்களித்தோம். இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதுகாக்கிற இயக்கம் அதிமுக தான். எனவே, எங்களுக்கு அவர்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள். கூட்டணிக்காக பயந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பின்வாங்கவில்லை.
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சியே நடைபெறவில்லை. இனிமேல் வரப்போவதும் கிடையாது. அதனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனியாகதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார்” என்று தெரிவித்தார். there is no coalition government
