சட்டமன்றத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக அமைப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சந்தித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Thalavai Sundaram secret meeting with OPS
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் பேச சபாநாயகர் அப்பாவு போதுமான நேரம் ஒதுக்க மறுப்பதாகவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பு செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டி செங்கோட்டையன் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

ஜீரோ ஹவரில் இந்த கோரிக்கையை பேச வலியுறுத்தினர். சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்க மறுத்ததால், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். Thalavai Sundaram secret meeting with OPS
இன்றைய கூட்டத்தொடரில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்தனர். வைத்திலிங்கம் சட்டமன்றத்திற்கு வரவில்லை.
உணவுத்துறை மீதான மானியக்கோரிக்கை என்பதால், அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் என்ற வகையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காமராஜை பாயிண்ட் ஆஃப் ஆர்டரில் பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததால், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை எம்.எல்.ஏ-க்கள் ஓய்வெடுக்கும் அறையில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அதிமுகவை ஒன்றிணைப்பது, கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து துவங்கி வைத்ததால், அதிமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் தளவாய் சுந்தரம், ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையனுடன் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஓ.பன்னீர் செல்வம் பேசியது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தளவாய் சுந்தரத்துடனும் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.