சீனாவின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தைவான் தீவில் இன்று (செப்டம்பர் 18) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,
வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் சந்திப்பில், வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் இடையில் தைவான் தீவு அமைந்துள்ளது.
இன்று தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.44 மணிக்கு டைடுங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் ஒன்று பொம்மை ரயில் போல் நடுங்குவதைக் கண்டு மக்கள் அச்சமடைந்த வீடியோ காண்பதற்கே அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு மேம்பாலம் இரண்டு துண்டாக உடைந்து ஒரு பகுதி முழுவதுமாக கீழே சாய்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஒரு டென்னிஸ் மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. டென்னிஸ் மைதானத்திற்குள் இருந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் நேற்று (செப்டம்பர் 17) 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்றைய நிலநடுக்கம் மிகவும் பயங்கரமானது. இரண்டாவது முறையாக நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலையிலேயே தங்கி வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல பேர் காயமடைந்துள்ளனர். உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
தைவான் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தைவானில் மிக மோசமான நிலநடுக்கம் செப்டம்பர் 1999 இல் 7.6 ரிக்டர் அளவில் பதிவானது. இது பல பாதிப்புகளை ஏற்படுத்தியதோடு 2,400-க்கும் மேற்பட்டவர்களின் உயிரையும் பறித்தது.
கடந்த மாத இறுதியில் இந்தியாவில் ஜம்மூ காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
இலங்கை குண்டு வெடிப்பு : சிறிசேனாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!
