அதிகரிக்கும் டெங்கு… 10,000 சிறப்பு முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

Published On:

| By Minnambalam

ten thousand special camps for dengue

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மொத்தம் 10,000 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைய உள்ள ஹெல்த் வாக் சாலை பணிகளை ஆய்வு செய்த பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 25) முத்துலட்சுமி ரெட்டி பார்க் அருகில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜப்பானுக்கு சென்றிருந்த போது டோக்கியோவில் ’ஹெல்த் வாக்’ என்ற பெயரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கான நடைபாதை இருந்தது. அந்த சாலையில் இரு புறமும் மரங்கள், ஓய்வுக்கான இருக்கைகள், ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் பலகைகள், நடப்பதனால் ஏற்படும் நன்மை குறித்த வசனங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

ADVERTISEMENT

நடக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டும்

அதே போல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நிதிநிலை அறிக்கையில் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் முறை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் நடைபாதை அமைப்பதற்கான பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 8 கிலோ மீட்டர் நடப்பதால் 10 ஆயிரம் அடி எடுத்து வைக்கப்படுகிறது. பத்தாயிரம் அடிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சாலையில் காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. எனவே மக்கள், குறிப்பாக வயதானவர்கள் அச்சமின்றி நடக்கலாம்.

ADVERTISEMENT

இந்த சாலையை அமைப்பதற்கான நோக்கமே ஒட்டுமொத்தமாக சென்னையில் இருக்கும் அனைவரும் இந்த சாலையில் வந்து நடக்க வேண்டும் என்பதல்ல. இந்த சாலையை பார்த்தால் நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான்.

நவம்பர் 3 ஆம் தேதி இரவுக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்று விடும். தமிழ்நாடு முதலமைச்சர் நவம்பர் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்த சாலையை திறந்து வைத்து நடக்க உள்ளார். தொடர்ந்து கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து மீதமுள்ள 37 மாவட்டங்களில் உள்ள ஹெல்த் வாக் சாலையை திறந்து வைக்க உள்ளார்.

37 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பத்தாயிரம் சிறப்பு முகாம்கள்

தொடர்ந்து பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை கடந்த 20 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை பொழிவு என்பது இருந்து கொண்டிருக்கிறது. மழைக்காலத்தில் தான் நோய் பாதிப்புகள் வரக்கூடும்.

குறிப்பாக, டெங்கு, மலேரியா, காலரா, சேற்றுப்புண், தொண்டைவலி போன்ற நோய்கள் வரும். மழைக்காலத்தில் வரும் நோய் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டெங்கு பெரிய அளவில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 10 மாதங்களில் 5,600 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவம்பர் டிசம்பர் மாதங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடிய மாதங்கள். இந்த மாதங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை 10 ஞாயிற்று கிழமை வருகிறது. இந்த 10 ஞாயிற்று கிழமையும் தமிழ்நாடு முழுவதும் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே மொத்தம் 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், ஓபிஎஸ், விஜயின் தாயார்: நடந்தது என்ன?

சசிகுமார் படத்தை இயக்கும் வேல்ராஜ்

Asian Para Games 2023: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share