கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தியின்போது மும்பையில் உள்ள தனது பங்களாவில் மிகப்பெரிய பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் நீடா அம்பானி. அதில் இந்தியா முழுக்க இருக்கும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள். அந்த பூஜையில் தமிழ்நாட்டில் இருந்து நயன்தாரா, அட்லீ ஆகியோரும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா சென்னை போயஸ் கார்டனில் கொண்டாடியுள்ள நவராத்திரி புகைப்படங்கள் பலரையும் உற்றுப்பார்க்க வைத்துள்ளது.
நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் தனது வீட்டில் நடத்தப்படும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் உள்ள விவிஐபிக்களை லதா ரஜினிகாந்த அழைப்பது வழக்கம்.
இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி பண்டிகை நேற்றுடன் (அக்டோபர் 24) நிறைவடைந்தது.
அதனை முன்னிட்டு போயஸ்கார்டனில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோர் நவராத்திரி பூஜைக்காக நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த வழிபாட்டில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் என தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அவரது மனைவி, நடிகை மீனா, லதா, அரசு அதிகாரிகள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பூஜைக்கு பின்னர் நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோர் பரிசுகள் மற்றும் பிரசாதங்களை வழங்கினர்.
அப்போது பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் கடந்த வாரம் வெளியான லியோ படம் நிகழ்த்தி வரும் வசூல் சாதனையால் ரஜினி – விஜய் ரசிகர்களிடையே சமூகவலைதளத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கடந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நவராத்திரி பூஜைக்காக ரஜினி வீட்டுக்கு சென்றுள்ளது, ரசிகர்கள் மோதல் வேறு, நடிகர்களின் நட்பு வேறு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கார்த்தி – நலன் பட டைட்டிலில் எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்!
சசிகுமார் படத்தை இயக்கும் வேல்ராஜ்