டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் பணி தற்போது சூடுபிடித்துள்ளது. தற்போதைய தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்குப் பிறகு யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னணியில் டி.வி. நரேந்திரன்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டி.வி. நரேந்திரன், இந்தப் போட்டியில் வலுவான வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
1988-ம் ஆண்டு டாடா ஸ்டீலில் இணைந்த அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக டாடா குழுமத்தில் பணியாற்றியுள்ளார். உலகளாவிய எஃகு சந்தையின் ஏற்ற இறக்கங்கள், பெரிய முதலீடுகள் மற்றும் ஐரோப்பிய செயல்பாடுகளில் ஏற்பட்ட சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார்.
சௌரப் அகர்வாலின் நிதி அனுபவம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை நிதி அதிகாரியுமான சௌரப் அகர்வால், மற்றொரு முக்கிய போட்டியாளராக உள்ளார்.
மூலதன ஒதுக்கீடு, முதலீட்டு முடிவுகள் மற்றும் குழும நிறுவனங்களின் நிதி உத்திகளில் அவருக்கு ஆழமான அனுபவம் உள்ளது. முதலீட்டு வங்கித் துறையிலும் பணியாற்றியிருப்பது அவரது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
“ஆஷிஷ் சௌஹான்” – எதிர்பாராத திருப்பமா?

என்.எஸ்.இ. தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் சௌஹான் இந்தப் போட்டியில் ‘டார்க் ஹார்ஸ்’ ஆக பார்க்கப்படுகிறார்.
தொழில்நுட்பம், நிதிச் சந்தை மற்றும் பெரிய நிறுவனங்களை நிர்வகித்த அனுபவம் அவரிடம் உள்ளது. எனவே, டாடா குழுமத்திற்கு வழக்கமான உள்ளகத் தேர்வுக்கு மாறான தலைமையை வழங்கக்கூடியவராக அவர் கருதப்படுகிறார்.
தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவும், டாடா டிரஸ்ட்ஸும் இணைந்து இந்த முக்கிய முடிவை எடுக்க உள்ளன.
