டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது பானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதியான நிலையில் என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் விற்பனையாகும் சில மதுபானங்களின் தரம் குறித்தும், அதில் கலக்கப்படும் சுவையூட்டிகள் குறித்தும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
FSSAI ஆய்வில் அதிர்ச்சி:
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தீவிர சோதனை நடத்தியது. அதில், ‘என்ரிக்கா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கும் குறிப்பிட்ட சில பிராந்தி மற்றும் ரம் வகைகளில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக விற்பனையை நிறுத்த உத்தரவு:
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலைனை கருத்தில் கொண்டு, 11 வகை மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மதுபானக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இந்த 11 வகை மதுபானங்களை இனி அனுப்பக் கூடாது. இந்த வகை மதுபானங்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மண்டல மேலாளர்களும் இந்தத் தடை உத்தரவை உடனடியாக விநியோகஸ்தர்களுக்கும் கடைகளுக்கும் தெரிவிக்க வேண்டும் எனக் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 11 மதுபானங்களின் பட்டியல்:
VSOP எக்ஸ்ஷ்னாவ் கோல்ட் பிராண்டி (VSOP EXSHNAW GOLD BRANDY)
லூயிஸ் வெர்னான்ட் XO பிளெண்டட் பிரீமியம் பிராண்டி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
மெக் டோவெல்ஸ் VSOP பிராண்டி (Mc DOWELLS VSOP BRANDY)
நம்பர் 1 மெக் டோவெல்ஸ் ஃபைன் பிராண்டி (NO.1 Mc DOWELLS FINE BRANDY)
மென்’ஸ் கிளப் டீலக்ஸ் பிராண்டி (MENSCLUB DELUXE BRANDY)
ஹனி பீ ஃபைன் பிராண்டி (HONEY BEE FINE BRANDY)
என்ரிகா VSOP செலக்ட் பிராண்டி (ENRICA VSOP SELECT BRANDY)
என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் XO பிராண்டி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
என்ரிகா பிரீமியம் ஃபிரெஞ்ச் பிராண்டி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
வெரியன் ஸ்பெஷல் பிராண்டி (VEREAN SPECIAL BRANDY)
என்ரிகா ஓல்ட் இன்டி கிளாசிக் டார்க் ரம் (ENRICA OLD INDIE CLASSIC DARK RUM)
