கோவை ஆவாரம்பாளையம் அருகே தண்டவாளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் நேற்று (ஆகஸ்ட் 13) ரயில்வே தண்டவாளப் பகுதியில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா ஆகிய இரு பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் யசோதா மற்றும் கவிதா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் தண்டவாளம் போன்ற ஆபத்தான இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கும் வகையில் மேற்பார்வையாளர்களை நியமித்திருக்க வேண்டும்; மேலும், ரயில் வரும்போது பணியாளர்களை அடையாளம் காணச் சிவப்புக்கொடி மற்றும் பாதுகாப்புச் சட்டைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றியும், மேற்பார்வையாளர் இல்லாமலும் இரு பெண்களைப் பணியில் அமர்த்தியதே இந்த விபரீதத்திற்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனிடையே, இரு பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
