MTC பேருந்து பயணிகளே உஷார்! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த போன் திருட்டு: சென்னையில் பரபரப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னை MTC பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் பையில் இருந்து, வெறும் 30 முதல் 40 வினாடிகளுக்குள் இரண்டு செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் K.K. நகர் ESI பேருந்து நிறுத்தத்தில் இருந்து 17B எண் கொண்ட MTC பேருந்தில் ஏறினேன். எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகே இறங்க வேண்டும். பேருந்தில் என் அருகில் அமர்ந்து பயணித்த 60 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவர் என்னிடம் மிகவும் இயல்பாகப் பேசினார்.

கடலை வேண்டுமா, குடிக்கத் தண்ணீர் இருக்கிறதா, பவர் பேங்க் இருக்கிறதா மற்றும் எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் விசாரித்தார். என் போனை வாங்கிப் பேசிவிட்டு தந்தார். வழக்கமாகப் பேருந்தில் செல்லும்போது ‘ஹெட்போன்’ அணிந்துகொண்டு யாருடனும் பேசாமல் தான் செல்வேன். ஆனால், அவர் வயதானவர் என்பதால் இயல்பாகப் பேசுகிறார் என நினைத்தேன். அதுவே எனக்குப் பெரிய கவனச்சிதறலாக (Distraction) மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

ADVERTISEMENT

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் வரை என் பையில் போன் இருந்தது. அந்த மூதாட்டி WCC நிறுத்தம் அருகே இறங்கிவிட்டார். அதற்கு அடுத்தடுத்த நிறுத்தங்களுக்குள், என் கண்ணில் ஏதோ விழுந்ததால் கண்ணைக் கசக்கிக் கொண்டு என் பிரெண்டின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தேன்.

எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலக நிறுத்தத்தில் இறங்கும்போது பார்த்தபோது, பை கிழிக்கப்பட்டு அதிலிருந்த ஓட்டை வழியாக எனது இரண்டு செல்போன்களும் திருடப்பட்டிருந்தன. வெறும் 30 முதல் 40 வினாடிகளுக்குள் இந்தத் திருட்டு நடந்துள்ளது. மூதாட்டியுடன் வந்த கூட்டாளிகள் யாராவது இந்த வேலையைச் செய்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது.

ADVERTISEMENT

சினிமா படங்களில் மட்டுமே பார்த்த இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நேரில் நடந்த பின்னரே இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. ரூ. 60,000 மதிப்பிலான போன்கள் திருடுபோய்விட்டன. சென்னை போன்ற மாநகரங்களில் MTC பேருந்துகளில் தினமும் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share