மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ‘அதீதமான’ சொத்து வரி உயர்வை கைவிடுவதாக சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.
இந்த திருத்திய மதிப்பு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, வரித் தொகையானது மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும்.
மாற்றி அமைக்கப்பட்ட வரித் தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன் பணவரியாக ஈடு செய்யப்படும். இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தெரிவித்துள்ளார்.
