ஆபாசமாக கரகாட்டம் ஆடினால்…. நீதிமன்றம் எச்சரிக்கை!

Published On:

| By Kavi

கோயில் திருவிழாக்களில் ஆபாச உடை அணிந்து நடனம் ஆடினால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பாப்பாத்தம்மன்  கோயில் திருவிழாவில் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விழா குழுவினர் மனு தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று (ஆகஸ்ட் 13) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “தற்போதெல்லாம் கரகாட்டம் ஆடுபவர்களின் உடைகள் மிக ஆபாசமாக உள்ளது. தமிழ்நாட்டை விட ஆந்திராவில் மிகவும் மோசமாக உள்ளது. அப்படி இருக்கும் போது கரகாட்டத்தை எப்படி அனுமதிப்பது” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இதற்கு காவல்துறை சார்பில், ‘ஆபாச நடனங்கள் மட்டுமல்ல… அரசியல் கோஷங்களும் எழுப்பப்படுகின்றன. அதனால் அனுமதி வழங்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதி, “உடையார்பாளையம் உட்பட நாடு முழுவதும் அரசியல் கோஷம் எழுப்ப உரிமை உள்ளது. ஆனால் ஆபாச நடனத்துக்கு அனுமதி வழங்க முடியாது” என்று குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

மனுதாரர் சார்பில், ‘கரகாட்டம் என்பது காலம் காலமாக நடந்து வரும் கலை நிகழ்ச்சி. கடந்த ஜூன் மாதம் அருகில் உள்ள கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது’ என்று கூறி அதற்கான நகலும் தாக்கல் செய்யப்பட்டது. 

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிபந்தனையுடன் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினார். 

” கரகாட்ட கலைஞர்கள் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடினால் உடையார்பாளையம் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசமாக நடனமாடிய ஆதாரங்கள் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share