51 வயதில் எம்பிபிஎஸ் சீட் வென்ற நபர்: 34 ஆண்டு கனவு நனவானது எப்படி?

Published On:

| By Pandeeswari Gurusamy

“விடாமுயற்சி இருந்தால் வயது ஒரு தடையே இல்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், 51 வயதான நபர் ஒருவர் தனது 34 ஆண்டுகால கனவை நனவாக்கி மருத்துவக் கல்லூரியில் சேர உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவச் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்ற 51 வயதான சுரேஷ்குமார் என்பவருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ்குமார், “நான் 1992-ஆம் ஆண்டே 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டேன். அப்போதிருந்த குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மருத்துவம் என்பது வசதி படைத்தவர்களுக்கான படிப்பு என்ற எண்ணமும் இருந்தது. அதனால் பார்மசி முடித்துவிட்டு உடனடியாக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.

அதன் பிறகு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் படித்து முடித்தாலும், மருத்துவராக வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

ADVERTISEMENT

எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தால் நீட் தேர்வுக்குத் தயாரானேன். சிறுவயதிலிருந்தே தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்கள் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. என் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தே எனது அறிவை வளர்த்துக் கொண்டேன்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதன்முறையாகத் தமிழில் நீட் தேர்வு எழுதியபோது எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் பின்வாங்காமல், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே படித்தேன். இந்த முறை ஆங்கில வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன்.

ADVERTISEMENT

34 ஆண்டுகளுக்குப் பிறகு எனது சொந்த ஊரில் இருக்கும் தாயாருடன் தங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளேன். வயது என்பது வெறும் எண்தான். இளம் தலைமுறை மாணவர்களுடன் இணைந்து ஒரே வகுப்பறையில் படிப்பதை மிகவும் ஜாலியாக இருக்கும். அதை ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மருத்துவம் படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதைச் செயலில் காட்டி மருத்துவ மாணவராக மாறி உள்ள சுரேஷ்குமாருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share