காங்கிரஸ் கட்சிக்குத் தனித்து நின்று வெல்லும் ஆளுமை கிடையாது என்றும், பதவி ஆசைக்காகவே அக்கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மாலை, தி.மு.க – அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க ”கனெக்டிங் கால்” போட்டுவிட்டது என்றும், இந்தத் தகவல் உடனடியாகத் தங்களுக்கு (காங்கிரஸுக்கு) வந்துவிட்டது என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். அப்போதே தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி ஆட்சி பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.இதனைத்தான் அ.தி.மு.க-வின் சி.வி. சண்முகமும் கூறி இருக்கிறார். இதனால்தான் காங்கிரஸ் த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்தது என்றும் நேற்று சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசி இருந்தார்.
இந்நிலையில், இன்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,”மாணிக்கம் தாகூருக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்குப் பதவி ஆசை, அதனால் உடனடியாக நீங்கள் ஓடிப்போய் தவெக வுடன் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தனியாக நின்று அமைச்சர் ஆவதற்கு இந்த உலகம் இருக்கும் வரை வழியே கிடையாது.
நீங்கள் தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளின் தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, இன்று அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் இணைந்து பதவிக்கு வர பா.ஜ.க முயற்சி செய்தது என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு ஆசை என்றால் போங்கள்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு மறுப்பு
இன்று இந்த ஆட்சியைப் பற்றிப் பேசும் மாணிக்கம் தாகூரின் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் சிறுபான்மையினர் கூட்டத்தில் பேசும்போது பா.ஜ.க அரசு ஓராண்டில் கவிழும் என்கின்றார். நீங்கள் கனவு காண வேண்டாம்; இன்னும் பல ஆண்டுகள் மட்டுமல்ல, மறுபடியும் மோடி அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நீங்கள், மேற்குவங்கத்தில் ஏதோ முறைகேடு நடந்தது, அதனால் பா.ஜ.க ஜெயித்தது என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், இடைத்தேர்தலில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸை நான்காவது இடத்திற்குத் தள்ளி பா.ஜ.க இன்று வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அந்த அளவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆனால், ராகுல் காந்தி மிக மோசமான இயக்கங்களோடு தொடர்புகொண்டு இன்று இந்தியாவை நிலைகுலைய வைப்பதற்கான முயற்சியைச் செய்துகொண்டு இருக்கிறார் என்று பியூஷ் கோயல் பேசியுள்ளார். அந்நிய இயக்கங்களோடு கைகோர்த்துக்கொண்டு மத்திய அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி கட்சியைச் சேர்ந்தவர்கள், இங்கே உள்ள ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி நிலைகுலைய ஏற்பாடு செய்யும் என்று சொல்வதை எல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்டம் காணும் அரசு
மேலும் பேசிய அவர், “விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோர் தங்கள் கையை வைத்தே அவர்கள் கண்ணைக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-வை இணைத்து இணைத்து அரசியல் செய்தீர்கள். அதேபோல் விஜய் கொள்கை எதிரி என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்; ஆனால், ‘ஆர்.எஸ்.எஸ் பிள்ளை’ என்று சொன்னீர்கள். இன்று அவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள். அப்படி என்றால், தேர்தலுக்கு முன்னால் எந்தக் காரணமும் இல்லாமல் பொய்ப் பழியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மீது சுமத்திக் கொண்டிருந்தீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
இன்று அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே அவர்கள் அமைச்சரவையில் பங்கு கொண்டது பிடிக்கவில்லை. அதிலும் திருமாவளவனே ‘எனக்கே பிடிக்கவில்லை’ என்று சொல்கிறார். அப்படி என்றால், ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துவிட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் எல்லோரும் அமைச்சர் ஆனீர்கள்?
அமைச்சர் ஆகிவிட்டு, ‘நாங்கள் இந்தக் கூட்டணியில் இருக்கிறோமா அல்லது அந்தத் த.வெ.க கூட்டணியில் இருக்கிறோமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை’ என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், எந்த நிலைப்பாடு இந்த அரசிடம் உள்ளது? மக்கள் அதீத பெரும்பான்மையை இந்த அரசாங்கத்திற்குத் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தினமும் ஆட்டம் காணும் அரசாங்கமாகத்தான் இருக்கப் போகிறதோ என்ற அச்சம் நமக்கு உள்ளது” என்றார்.
