விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, விசிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக இன்று (மே 24) அறிவித்துள்ளார். இந்நிலையில், “தங்களின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை எனினும், தங்களின் கருத்தை மதிக்கிறேன். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என விசிக துணைப் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வணக்கம் பாபு. தோழமையில் கண்ணியமும் உறுதியும் மிக்கவர் தாங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக விளிம்புநிலை மக்களுக்கும் செய்யூர் தொகுதிக்கும் தாங்கள் ஆற்றிய நற்பணிகளை நாடறியும். நமது தலைவர் அவர்களும் கடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அதனை மனதாரப் பதிவு செய்து பாராட்டினார் என்பதைத் தாங்களும் அறிவீர்கள்.
அண்மைக்கால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும், ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். தலைவரின் எந்தவொரு முடிவும் தன்னலம் சார்ந்தது அல்ல. ஆயிரமாண்டுக்கால சமத்துவக் கனவுக்காகத் தன் வாழ்வையும் இளமையையும் ஒப்படைத்துக்கொண்டவர் அவர்.
குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் வழிகாட்டிச் செல்லும் ஒரு தாய், சில நேரங்களில் அத்துமீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப் போல, தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றியிருக்கிறார். உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் நாம் கைவிடவா போகிறோம்?
இங்கு நிகழ்ந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல; இளைய தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெருவிருப்பம் காட்டாற்று வெள்ளமாய், சுனாமி அலையென வெடித்திருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நாயக பிம்பங்களை மட்டுமே கதாநாயகர்களாக முன்னிறுத்தி வந்த தமிழ்ச் சினிமாவில், நாற்பதாண்டுகளுக்கு முன் கால் ஊனமுற்ற ‘சப்பாணி’ என்ற கதாபாத்திரத்தைக் கதாநாயகனாக ‘பதினாறு வயதினிலே’ படம் முன்னிறுத்தி வெற்றி பெற்ற தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன். அதற்குப் பின் தமிழ்ச் சினிமாவின் தடமே மாறிப்போய்விட்டது.
அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றது முந்தைய கதாநாயகர்கள் மீதிருந்த வெறுப்பினால் அல்ல; மரபான வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்ற வேண்டும் என்ற இளைய தலைமுறையின் தாகத்தால்! தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் அரசியல் மாற்றங்கள் வியத்தகு கோணத்தில் அரங்கேற உள்ளதை அவதானிக்க முடிகிறது.
மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும் நாம் பின்தொடர இயலாத வண்ணம் வியத்தகு பாதையில் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், தலைவரின் கரங்களை இறுகப் பற்றிக்கொள்வதே சரியென எனக்குப் படுகிறது.
அன்புள்ள பாபு… அண்ணனிடம், நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களையும் விமர்சனங்களையும் தாராளமாக முன்வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டுப் பேசாதவரா நம் தலைவர்? எனக்கு உடன்பாடில்லை எனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீரடித்து நீர் விலகுமா என்ன!”
இவ்வாறு சிந்தனைச் செல்வன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
